கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது.
இந்நிலையில் கேஜிஎப் படம் வெளியானது முதல் படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறிது கூட எங்கேயும் படம் போர் அடிக்காமல் முழுக்க முழுக்க படம் விறுவிறுப்பாக செல்கிறது என்றும், படம் சரியான தரம் என்றும் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதுமே கேஜிஎப் வசூலை வாரிக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கான திரையரங்குகள் குறைந்து கேஜிஎப்க்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்தியிலும் கடுமையான வசூலை குவித்து வருகிறது கேஜிஎப்.
இந்நிலையில் இந்த வார இறுதியின்படி ரூ.552 கோடி வசூலை உலகளவில் குவித்துள்ளது கேஜிஎப் திரைப்படம். காம்ஸ்கோர் வெளியிட்ட தகவலின்படி ஏப்ரல் 15-17 வரையிலான வார இறுதியின்படி வசூலை வாரிக்குவித்துள்ளது கேஜிஎப். மொத்த வசூல் ரூ.500 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல முதல் 3 நாட்கள் வசூலே 100 கோடிக்கு குறைவில்லாமல் குவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி முதல்நாள் ரூ.165.37 கோடியும், இரண்டாம் நாள் ரூ.139.25 கோடியும், மூன்றாம் நாள் ரூ.115.08 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதற்கிடையே கேஜிஎப் 3 திரைப்படத்துக்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தனது கேஜிஎப் 2 படத்தின் இறுதி கார்டில் ஒரு ஐடியா கொடுத்திருத்திருக்கிறார்கள். இதன் காரணமாக யஷ் மற்றும் கேஜிஎப் திரைப்பட ரசிகர்கள் ட்விட்டரில் KGF3 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பு முன் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.