80-90-களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் விஜய்காந்த் மற்றும் சத்தியராஜ். இருவருமே நடிப்பு ஜாம்பவான்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருவரும் இணைந்து படங்களில் நடித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த நடிகர் சத்தியராஜ், கதாநாயகன் , குணச்சித்திர நடிகர் என தனது திறமையை வளர்த்துள்ளார். இந்த நிலையில் சத்தியராஜின் 25 வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் , அவருக்கு கோவை மாவட்டத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்த காலக்கட்டத்தில் இருந்த முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள் பங்கேற்று சத்தியராஜ் குறித்து பாராட்டி பேசியிருந்தனர்.


அந்த நிகழ்ச்சில் அப்போதைய நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலும் , நண்பர் என்ற முறையிலும் நடிகர் விஜயகாந்த் கலந்துக்கொண்டு , சத்தியராஜை பாராட்டி பேசியிருந்தார். குறிப்பாக அப்போதைய சினிமா காலக்கட்டம் எப்படி இருந்தது. இருவரும் எப்படி சினிமாவில் கஷ்டப்பட்டோம் என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.


விஜயகாந்த் சத்தியராஜ் குறித்து பேசியதாவது:


"எங்களுக்குள்ள சினிமாவுல போட்டிகள் இருந்தது.ஆனால் அப்போ சினிமாவுல பொறாமை என்பது கிடையாது. போட்டி எப்படிப்பட்டது என்றால்  என்னுடைய படம் வெளியானால் , இவருடைய நண்பர் ராமராதன் இருக்காரு, என்னுடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தாரு. இவங்க இரண்டு பேருக்குள்ளேயும் போட்டி இருக்கும். நான் எடுக்குற படம் பெருசா , நீ படம் எடுக்குறது பெருசானு.அவங்களுக்குள்ள ஆரோக்கியமான போட்டி இருக்கும். இந்த 25 வருடத்திற்கு பிறகும் சத்தியராஜ் சார் சினிமாவுல இருக்காருனா அவர் யாரையும் விரோதியாக நினைத்தது கிடையாது.எல்லோரையும் நண்பராகத்தான் அணுகுவார்.


அவர் எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவரது நல்ல மனதும் உயர்ந்திருக்கிறது. எங்களை போல யாரும் சினிமாவிற்கு கஷ்டப்பட்டு யாரும் வந்தது கிடையாது. நானும் சத்தியராஜ் சாரும் படிப்படியாக ஏறி , எல்லோரிடமும் கெஞ்சி , ஆல்பம் காட்டி வாய்ப்பு கேட்டோம். அப்போது எங்களிடம் பராசக்தி வசனம் பேசு , வீரபாண்டிய கட்டபொம்மன் போல நடிச்சு காட்டு அப்படினு சொல்லுவாங்க. சத்தியராஜ் சாருக்கு எல்லா வசனமும் தெரியும்.


நானாவது அரைகுறை , அவருக்கு எல்லாம் அத்துப்படி. இன்றைக்கு இந்த இடத்தில்  நிற்கிறோம் என்றால் உழைப்பு..இன்னும் 15 வருடங்கள் கழித்தாலும் கூட , சத்தியராஜ் புரட்சி தமிழனாக , நல்ல கதாநாயகனாகத்தான் இருப்பார். இன்றைக்கு சத்தியராஜின் மகனும் நடிக்க வந்துவிட்டார். ஆனாலும் சத்தியராஜ் கதாநாயகனாக கரலா கட்டை சுத்திக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறார். சத்தியராஜின் மார்க்கெட்டை அவரது மகன் கூட பிடிக்க முடியாது, அவருக்கும் இவர் டஃப் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார் விஜயகாந்த்