யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம், தற்போது ரூ.1000 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது தியேட்டர்களில் மக்களின் வரவேற்பில் வெற்றிநடை போடும் நிலையில் கேஜிஎப் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் மே மாதம் 27ம் தேதி கேஜிஎப் அமேசான் ப்ரைமில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் படம் சென்றுகொண்டிருப்பதால் இந்த மாதக்கடைசியில் ஓடிடியில் வெளியிடுவதே சரியாக இருக்குமென இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கேஜிஎப் உடன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கும் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். பீஸ்ட் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் பீஸ்ட் படத்தை ஜூன் மாதம் ஓடிடியில் வெளியிடவே முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் முதல்வாரத்தில் பீஸ்ட் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கேஜிஎப் 3 ஆம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் நடிகர் யஷ்ஷூடன் நடிகர் பிரபாஸ் சில காட்சிகளில் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்தப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.