கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக, இரண்டாம் பாகத்திற்கான டீசரை படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. வெளியிட்ட ஒரே நாளில் டீசர் மட்டும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தற்போது, அந்த டீசரை மட்டும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இரண்டாம் பாகத்தில் யஷிற்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.


ஆதிரா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் கெட்டப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டூர் இந்த படத்தை தயாரித்திருந்தார். அவரே படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். யஷ், சந்தோஷ் நாராயணனுடன் படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ரெட்டி, இந்தி நடிகை ரவீனா தாண்டன், ஆனந்த் நாக், ராமச்சந்திரன் ராஜூ, அஜ்யூத் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.




முதல் பாகத்தில் ராக்கி என்ற நாயகனின் வாழ்க்கையை விளக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்திற்கு, இந்த பாகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். கே.ஜி.எப். ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், படம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. கே.ஜி.எப். இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.