சி ஸ்பேஸ் என்கிற புதிய ஓடிடி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது கேரள மாநில அரசு


சி ஸ்பேஸ் (C Space)


சமீப காலங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு இடையில் தொடர் மோதல்கள் நடந்து வருகிறது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் சில வாரங்களுக்குப் பிறகு வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாவதால் திரையரங்க வசூல் பாதிப்படைவதாக தொடர் குற்றச்சாட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படியான சூழலை எதிர்கொள்ளும் வகையில் கேரள மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறது.


ஒரு மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் , நல்ல திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓடிடி தளத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் கேரள அரசு வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.


சி ஸ்பேஸ்:


உலகம் முழுவதில் இருந்து இந்த திரைப்படம் விழாவிற்கு திரைப்படங்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். இப்படியான நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில்  வெளியாகும் சில படங்களும் இந்த சி ஸ்பேஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்த ஓடிடி தளத்தில் கேரள மாநில திரைப்பட நல வாரியம் முழுமையாக நிர்வகித்துக் கொள்ள இருக்கிறது. மேலும் இந்த தளத்தில் வெளியாகும் படங்களின் தரத்தை நிர்ணயித்து தேர்வு செய்வதற்கு 60 நபர்களை இந்த வாரியக் குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த ஓடிடி தளத்தில் முதல் கட்டமாக 35 திரைப்படங்களையும், ஆறு ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பே பெர் வியூ அடிப்படையில் இந்தப் படங்களை ஒரு முறை பார்வையிட 75 ரூபாய் வசூலிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் படங்களுக்கு என கிடைக்கும் வருமானத்தின் ஒரு சதவீதம் படத்தின் தயாரிப்பாளருக்கு கொடுக்கப்படும். 


இது தவிர்த்து கேரள அரசின் இந்த முயற்சி திரையரங்கம் மற்றும் ஓடிடி தளங்களுக்கு இடையிலான நெருக்கடிகளை சரிசெய்யும் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கேரளாவைக் காட்டிலும் இந்த பிரச்சனை தீவிரமாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்த மாதிரியான ஒரு அனுகுமுறை எவ்வளவு அவசியமானதாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது.