சிறந்த மலையாள சீரியல்: அதிர்ச்சி முடிவை எடுத்த கேரள அரசு!
'இந்த வருடம் எந்த மலையாள சீரியலும் அவார்ட் தரும் அளவுக்கு இல்லை. அதனால் எதற்கும் அவார்ட் தரப்போவதில்லை’ என முடிவெடுத்துள்ளது கேரள அரசு. இந்த விருதை முடிவு செய்யும் குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது. ’இந்த ஆண்டுக்கான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சீரியல்களில் கலைத்தன்மையோ, தனித்தன்மையோ அல்லது டெக்னிக்கலான புதுமையான விஷயங்களோ எதுவுமே இல்லை என்பதால் இந்த ஆண்டு எந்த சீரியலையுமே விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்போவதில்லை என விருதுக்கான ஜூரி முடிவுசெய்துள்ளது. இதுதவிர சிறந்த சீரியலுக்கான இரண்டாவது பரிசும் இந்த ஆண்டு தரப்போவதில்லை என விருதுகள் குழு முடிவெடுத்துள்ளது. இதனால் சிறந்த இயக்குநர் விருதும் இந்த ஆண்டு தரப்போவதில்லை.
மலையாள சினிமாக்களுக்கு நேர்முரணாக, குடும்பங்களில் நடக்கும் வன்முறை, பெண்களுக்கு இடையிலான வன்மம், கதையை மலினமாகக் கையாளுவது ஆகியவற்றை புனிதப்படுத்தியும் மிகைப்படுத்தியும் காண்பிப்பதற்குப் பெயர் போனது மலையாள சீரியல்.
கடந்த மே மாதம் கேரளாவில் புதிதாக அரசு பொறுப்பேற்றதை அடுத்து மாநில கலாச்சாரத்துறை அமைச்சராக சஜி செரியன் நியமிக்கப்பட்டார். அமைச்சர் சஜி குறிப்பாக மலையாள சீரியல்களின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். ’அறிவியல் பூர்வமல்லாத மூடநம்பிக்கை மிக்க விஷயங்களை சீரியல்கள் பரப்புகின்றன. அதனால் அவற்றை தனிக்கை செய்வதற்குக் குழு அமைக்கப்படும்’ என அவர் கடுமையாகச் சில கருத்துகளைக் கூறினார்.
சீரியல்களுக்கு விருதுகள் எதுவும் தரப்படவில்லை என்றாலும் டெலிஃபிலிம்கள் இந்த வருட விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ரஜில் இயக்கத்தில் உருவான கள்ளன் மருதா என்னும் டெலிஃபிலிம் சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை எழுதிய அர்ஜூன் என்பவருக்கு சிறந்த கதைக்கான விருது வழங்கப்படுகிறது.
’கதையறியாதே’ என்கிற பிரபல சீரியலில் நடித்த நடிகர் சிவாஜி குருவாயூருக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சக்கப்பழம் என்கிற நிகழ்ச்சியில் நடித்த அஸ்வதி ஸ்ரீகாந்த்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் ஓரிதல் என்கிற நிகழ்வில் நடித்த சிறுமி கௌரி மீனாட்சிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த ஆவணப்படத்துக்கான விருது நந்தகுமார் தோட்டத்தில் என்பவர் இயக்கிய ’சீ ஆஃப் எக்ஸ்டஸி’ படத்துக்கும், சூழலியல் ஆவணத்துக்கான விருது கே.ராஜேந்திரன் இயக்கிய அடிமத்திண்டே ரெண்டாம் வரவு படத்துக்கும், பெண்கள் குழந்தைகளுக்கான சிறந்த ஆவணப்படத்துக்கான விருது ரியா பேபி இயக்கிய ‘ஐ அம் சுதா’ படத்துக்கும், சிறந்த சரிதைக்கான விருது பிஜூ முத்தத்தி இயக்கிய கரியன் படத்துக்கும் வழங்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு எண்ணிக்கை ஓயாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது சீரியல்களுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.