கொரோனா பரவல் காரணமாக பல துறைகள் சவாலான சூழலை எதிர்க்கொண்டுள்ளன. அதில் சினிமா துறையும் அடங்கும். தமிழகத்தில் கொரோனா இரண்டாம்   அலை தாக்கத்தால்  படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, தியேட்டர் வெளியீட்டிற்கு காத்திருந்த படங்களும் கிடப்பில் போடப்பட்டன. உரிய நேரத்தில் போடப்பட்ட ப்ளான்கள் எதுவுமே நிறைவேறாததால் , தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பல சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளியீட்டிற்காக காத்திருந்த சிறு மற்றும் பெரு பட்ஜெட் படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால், அவற்றை  ஓடிடி தளங்களில் வெளியிடலாம் என முடிவெடுத்து வருகின்றனர் படக்குழு. ஓடிடியில் வெளியிடப்படும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பு உள்ளது. இதனை அறிந்த கேரள அரசு திரைத்துறையினர் மற்று ரசிகர்கள் ஆகிய இரு தரப்பும் பயனடையும் வகையில் ஒடிடி தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் குறைந்த  கட்டணத்தில் ரசிகர்கள் படங்களை பார்க்கலாம். மேலும் தயாரிப்பாளர் மட்டுமல்லாது அரசும் லாபம் ஈட்ட முடியும். 



இந்த அறிவிப்பு  மலையாள ரசிகர்கள் மற்றும் மலையாள சினிமா துறையினர் மத்தியிலும் வரவேற்பை  பெற்றுள்ளது. இது குறித்து  கேரள அரசு, “ சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும் என இதனை உருவாக்கியுள்ளோம், பெரிய பட்ஜெட் படங்களுக்கு விருப்பம் இருந்தால்  அரசு ஓடிடி தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் “ என தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கும் லாபம் கிடைக்கும். கிடைக்கும் வருமானத்தில்  ஒரு பங்கு படங்களில் தயாரிப்பாளருக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் ஓடிடி தளம் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர  இருப்பதாக கூறப்படுகிறது.



கேரள  அரசின் இந்த அறிவிப்பை தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் தனி ஓடிடி உருவாக்கப்படுமா என கோலிவுட் எதிர்பார்க்கிறது.  குறிப்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இணைத்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ இதுபோன்ற முயற்சி நமது தமிழ்த் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்.” என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  கடந்த மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு , அரசு நெறிக்காட்டு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் தியேட்டர்கள் அனைத்தும் 50 சதவிகித பார்வையாளருடன் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.