நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக விளம்பர நோக்கில் பாஜக பிரமுகர் வழக்கு தொடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.


மேலும், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் வழக்கு போட்டுள்ளார் எனக்கூறிய தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய குழு அமைக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தது. மேலும், ஏ.கே.ராஜன் குழு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும் முன்னரே தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜக வழக்கு தொடுத்தடு. தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய நலன் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவ கல்வியை மேம்படுத்த மருத்துவ ஆணையத்திடம் மட்டுமே ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இதை அரசியலாக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.




இந்த வழக்கில், அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்


இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.


ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா? வழக்கறிஞர் விஜயனிடம் அதுகுறித்த சட்டபூர்வ விளக்கத்தைக் கேட்டறிந்தோம். அவர் கூறுகையில்,’ நீட் தேர்வை ரத்து செய்வது மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்துக்கு உட்பட்டதா அல்லது  மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரத்துக்கு உட்பட்டதா என்பதை முதலில் ஆய்வு செய்யவேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது, நீட் தேர்வு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அரசியல் சாசன விதிகளின்படி நீட் தேர்வை ரத்து செய்வது சாத்தியமற்றது (Constitutionally Impossible). மேலும் ஏ.கே.ராஜன் கமிட்டி நீட் குறித்த பரிந்துரைக்காகதான் அமைக்கப்பட்டதே தவிர அதற்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. அதன் பரிந்துரைகளை மெடிக்கல் கவுன்சில் ஒதுக்கிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஏ.கே.ராஜன் கமிட்டியை அமைக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா என்பதை விட, அந்தக்கமிட்டியின் அதிகார எல்லை எதுவரை என்பது குறித்த தெளிவு அரசுக்கு வேண்டும். ஏ.கே.ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது நல்லதுதான் ஆனால் அது ரத்து செய்யப்படுமா இல்லையா என்பது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தது’ என்றார்.