இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் மிக முக்கியமான படம் ‘வடசென்னை’. 80-களின் வடசென்னையையும், ஹார்பரை சுற்றி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும், அரசியலையும் இதில் படமாக்கியிருப்பார் வெற்றிமாறன். அன்பு, ராஜன், செந்தில், குணா என நான்கு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த கதையில் அன்புவாக தனுஷ் நடிக்க, ராஜனாக அமீர் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன பின்பும் கடந்த வருடம் இந்த கேரக்டர்கள், நமது மீம் க்ரியேட்டர்களால் அலங்கரிக்கப்படும் அளவிற்கு நம்மோடு பயணிக்க தொடங்கின. அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் உருவாக்கும் காட்சிப்படுத்துதலின் இயல்புத்தனம்.


பல நேர்காணல்களில் வெற்றிமாறன், இதற்கான ப்ரீக்வல், சீக்வல் ஆகியவை குறித்து பேசியிருக்கிறார். இதில் வெகு சில நேரமே வந்தாலும் படம் முழுவதையும் தனுஷின் அசுர நடிப்பையும் மீறி ஆண்ட கதாபாத்திரம் ராஜன். அந்த கதாப்பாத்திரத்தின் கதையை வெப் சீரிஸாகவே எடுக்கும் ஐடியா இருப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார்.



முதன்முதலில் ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்க முயற்சிகள் எடுத்தபோது முதலில் அன்புவாக சிம்புவும், ராஜனாக தனுஷும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அன்புவாக தனுஷ் மாற, ராஜனாக விஜய் சேதுபதி நடிப்பது என முடிவானது. இறுதியில் விஜய்சேதுபதிக்கு பதில் ராஜனாக வந்து நின்ற அமீர் அதற்கு நியாயமும் செய்தார்.


‘வடசென்னை’ படமே ராஜனின் கதையில் இருந்துதான் தொடங்கும். தன் மக்களின் அடிப்படை வாழ்வுக்காகவும், தங்கள் நிலத்துக்காகவும் போராட ஆரம்பித்த ராஜன் எப்படி வன்முறை உலகத்துக்குள் போனார், அதிகாரப் போட்டியால் நண்பர்களாலேயே எப்படி கொல்லப்பட்டார் என்பதை ‘வடசென்னை’ படம் பேசியது. இந்தப் படத்தில் ராஜனாகவே வாழ்ந்திருந்தார் அமீர்.


2018-ம் ஆண்டு ‘வடசென்னை’ வெளிவந்தபோதே பார்ட் -2 அன்புவின் எழுச்சியாக வரும் என்றும், ராஜனுக்கென தனியாக ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன் இருப்பதாகவும் பேசப்பட்டது. அவை ஏற்கெனவே கிட்டத்தட்ட எடுக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் ‘அசுரன்’, ‘விடுதலை’, ‘வாடிவாசல்' என அடுத்தடுத்து பிஸி ஆனதால் ‘வடசென்னை’யின் சீக்வெல், ப்ரீக்வல் குறித்த செய்திகள் இல்லாமல் போனது. இந்நிலையில் இப்போது வடசென்னை முதல் பாகம் குறித்த செய்தி கிடைத்திருக்கிறது.



‘வடசென்னை’ ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை 'ராஜன் வகையறா'வில் காட்சிப்படுத்த இருக்கிறார் வெற்றிமாறன். இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கிறார். இதற்கென கென் கருணாஸுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. கென் கருணாஸ் ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் தனுஷின் மகனாக நடித்தவர்.


சமுத்திரக்கனி உள்பட ராஜனின் நண்பர்களாக ‘வடசென்னை’யில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் இந்த ‘ராஜன் வகையறா’வில் இடம்பெற இருக்கின்றன. இதற்கான நடிகர்கள் தேர்வு நடக்க இருக்கிறது.


‘வாடிவாசல்' படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது முடிந்ததும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘ராஜன் வகையறா’வை வெப்சீரிஸாக எடுக்க இருக்கிறார் வெற்றிமாறன்.