சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரஜினி ரசிகர்கள் சில பேருக்கு இந்தப் படம் பிடித்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடிக்க வில்லை என்பதை அண்ணாத்த படத்தின் முதல் காட்சி முடிந்ததும் தெரிந்தது.
படத்தின் கதையில் புதிதாக எதுவுமில்லை. சிவா தனது முந்தைய படமான விஸ்வாசத்திலிருந்து கொஞ்சம், திருப்பாச்சி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் எடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷூக்கும், ரஜினிக்குமான பாசப் பிணைப்பு ஒர்க் அவுட் ஆக வில்லை என விமர்சனமும் எழுந்துள்ளது. ஆனால் விமர்சனத்தையெல்லாம் ஓரம் வைத்துவிட்டது கீர்த்தி சுரேஷின் சம்பள விவரம். அண்ணாத்த படத்துக்கு தங்கை கதாபாத்திரம் என்றாலும் ரூ.2 கோடியை சம்பளமாக பெற்றாராம் கீர்த்தி சுரேஷ். இந்த கதாபாத்திரத்துக்கு இவ்வளவு சம்பளமா என வாயடைத்து நிற்கிறது கோலிவுட்.
இந்த நிலையில் சிவாவுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், முன்னதாக சிவா அஜித்தை வைத்து வேதாளம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த ரீமேக்கில் தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தத்தகவலை கேட்ட கீர்த்திசுரேஷின் நலம் விரும்பிகள் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் எனவும் மீறி நடித்தால் லட்சுமி மேனன் போல காணாமல் போய் விடுவாய் என்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் கீர்த்தி சுரேஷ் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன