சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் அண்ணாத்த படம் வெளியாகி 50 நாள்கள் நிறைவடைந்ததை அடுத்து தனது மகள் தொடங்கியிருக்கும் ஹூட் செயலியில் அண்ணாத்த படம் குறித்தும்,  படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் ரஜினி பேசினார்.


அதில் பேசிய அவர்,  “2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடங்கினோம். 35 நாள்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பிற்குப் பிறகு, நாங்கள் ஓய்வு எடுத்தோம். 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாங்கள் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்கு முன், கொரோனா வைரஸ் பரவியது. 




இதனையடுத்து அடுத்த ஒன்பது மாதங்களாக எந்த வேலையும் இல்லை. டிசம்பரில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மீண்டும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். கோவிட் சோதனைகள் உட்பட அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றினோம். கலைஞர்கள்கூட நடிக்கும்போது தவிர மற்ற நேரத்தில் முகமூடியை அணிந்திருந்தார்கள்.


இரண்டு வாரங்கள் இடைவிடாத படப்பிடிப்பிற்குப் பிறகு, கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இது எங்களுக்கு ஐந்து நாள்கள் கழித்தே தெரியவந்தது.  கீர்த்தி சுரேஷுடன் நான் முகமூடிகள் இல்லாமல் காட்சிகளில் நடித்தேன். அண்ணன் தங்கை கதாபாத்திரம் என்பதால் அவருடன் நெருங்கியே பழகினேன். கீர்த்தி சுரேஷின் உதவியாளரும் எங்களுடனேயே இருந்தார். 




கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா என தெரியவந்ததை அடுத்து இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கலக்கமடைந்து, படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்தனர். மேலும் எங்கள் அனைவருக்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை.


மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கினோம். க்ளைமாக்ஸில் சுமார் 800 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை வைத்து படமாக்க வேண்டியிருந்தது. கிளைமாக்ஸை 18 நாட்கள் படமாக்கினோம். அதில் சுமார் 8 நாட்கள் 800 பேருடன் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்வதை கற்பனை செய்து பாருங்கள். 




மேலும் படப்பிடிப்பின்போது மட்டும் அனைத்து கலைஞர்களும் முகமூடியை அகற்ற வேண்டும் என்பது கடுமையாக பின்பற்றப்பட்டது. நான் யாருடனும் நெருங்கி பழகக்கூடாது என டாக்டர்கள் தெளிவாக சொன்னார்கள். கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ ஆரம்பித்தது. தெலங்கானாவில் இரண்டாவது அலைக்கு போடப்பட்ட லாக்டவுனுக்கு முன்னதாக, நாங்கள் எங்கள் படப்பிடிப்பை முடித்தோம். இதுவும் இறைவனின் விருப்பம்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண