சமீபத்தில் ஐ.சி.சி. வெளியிட்ட தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசானே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐ.சி.சி. அவ்வப்போது வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சில வீரர்களின் தரவரிசை சாதனை மட்டும் முறியடிக்கப்படாமல் உள்ளது.


2021ம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க உள்ள இந்த சூழலிலும் இதுரை முறியடிக்கப்படாத ஐ.சி.சி. தரவரிசை சாதனைகளை கீழே காணலாம்.


டெஸ்ட் கிரிக்கெட்:



  1. டான் பிராட்மேன் ( ஆல்-டைம் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்)




ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர் டான் பிராட்மேன். இவர் இதுநாள் வரை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலே மிகச்சிறந்த தரவரிசையை தன் வசம் வைத்திருப்பவர் டான் பிராட்மேனே. அவர் 1948ம் ஆண்டு 961 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவரது சாதனை இதுநாள் வரை முறியடிக்கப்படாமல் உள்ளது. தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே 945 புள்ளிகளுடன் அவரை நெருங்கினார்.



  1. சிட்னி பர்னஸ் (ஆல் டைம் பெஸ்ட் டெஸ்ட் பந்துவீச்சாளர்)




அன்றைய காலகட்டத்தின் பந்துவீச்சு ஜாம்பவானாக வலம் வந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சிட்னி பர்னஸ். வேகப்பந்துவீச்சாளரான பர்னஸ் 1914ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்துவீச்சாக 932 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அவரது இந்த சாதனை ஒரு நூற்றாண்டை கடந்தும் இதுநாள் வரை முறியடிக்கப்படவில்லை. தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் பாட் கம்மின்ஸ், அஸ்வின், ஜேம்ஸ் ஆண்டர்சன்  மட்டுமே 900 புள்ளிகளை கடந்த வீரராக உள்ளார்.



  1. கேரி சோபர்ஸ் ( ஆல் டைம் பெஸ்ட் டெஸ்ட் ஆல் ரவுண்டர்)




மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்த 1965,75 காலகட்டங்களில் மிகவும் அற்புதமான ஆல்ரவுண்டராக கேரி சோபர்ஸ் வலம் வந்தார். அவர் 1967ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 669 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். 50 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அவரது தரவரிசை சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது.


ஒருநாள் கிரிக்கெட் :



  1. விவ் ரிச்சர்ட்ஸ் ( ஆல் டைம் பெஸ்ட் ஒருநாள் பேட்ஸ்மேன்)




கிரிக்கெட்டை ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக்கியதில் ஒருநாள் போட்டிகளின் பங்கு தவிர்க்க முடியாதது. இந்த போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளில் ஜாம்பவான் கிரிக்கெட்டர் விவ் ரிச்சர்ட்ஸ் 1985ம் ஆண்டு 935 புள்ளிகளுடன் தனது சிறந்த ஒருநாள் தரவரிசையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது சாதனை அரைநூற்றாண்டைக் கடந்தும் இதுநாள் வரை முறியடிக்கப்படாமலே உள்ளது. இந்த பட்டியலில் உள்ள டாப் 10 வீரர்களல் இந்திய கேப்டன் விராட்கோலி மட்டுமே உள்ளார். அவர் அதிகபட்சமாக 911 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கூட டாப் 10 பட்டியலில் இடமில்லை.



  1. ஜோயல் கார்னர் ( ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் பந்துவீச்சாளர்கள்)




மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்தில் ஜோயல் கார்னர் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான ஜோயல் 1985ம் ஆண்டு தனது சிறந்த பந்துவீச்சு தரவரிசையாக ஒருநாள் போட்டிகளில் 940 புள்ளிகளைப் பிடித்து முதலிடம் பிடித்தார். இதுநாள் வரை அவரது இந்த சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது. தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களிலும், இந்திய வீரர்களிலும் யாருமே டாப் 10 பட்டியலில் இல்லை.



  1. கபில்தேவ் ( ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் ஆல்ரவுண்டர்)




இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியின் மையப்புள்ளியாக பார்க்கப்படுபவர் கபில்தேவ். இந்தியாவிற்காக முதல் உலககோப்பையை வென்று தந்த கபில்தேவ் பேட்டிங், பந்துவீச்சு, பவுலிங்கில் அசத்தலான வீரராக இருந்தார். அவர் 1985ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஆல் ரவுண்டருக்கான சிறந்த தரவரிசையாக 631 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அவரது இந்த சாதனையும் 50 ஆண்டுகளை கடந்து இந்த நாள் வரை எந்த வீரர்களாலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 வீரர்கள் பட்டியலில் இந்தியர்கள் வேறு யாரும் இல்லை.