கண்ணகி


அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கண்ணகி. யஹ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும் படத்தொகுப்பை சரத்குமார் கையாண்டுள்ளார். கார்த்திக் நேத்தா இப்படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கும் கண்ணகி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


நான்கு பெண்களின் கதை


கலை , நேத்ரா, நதி , கீதா ஆகிய நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது கண்ணகி. வெவ்வேறு பொருளாதார சூழலைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் திருமணம். எதிர்பாராத கருத்தரிப்பு, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாததால் எதிர்கொள்ளும் அவதூறுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இவர்கள் தங்களது விருப்பத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் சமூகத்துடன் தங்களது குடும்பத்துடன் போராடுகிறார்கள் என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரியவருகிறது. 


 பல்வேறு மலையாள திரைப்படங்களில்  சிறப்பான இசையை வழங்கியிருக்கும் ஷான் ரஹ்மான் இந்தப் படத்திற்கு பின்னனி இசையமைத்துள்ளார். 


முழுக்க முழுக்க பெண்களைச் சுற்றி நிகழும் இந்தக் கதை பார்வையாளர்களிடம் நிச்சயம் பலவிதமான கேள்விகளை எழுப்பு வகையில் அமைந்திருப்பதை இந்த ட்ரெய்லர் உணர்த்துகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த ட்ரெய்லரை தங்களது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.