ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ்.அம்பேத் குமார் வழங்கும், அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' படம் தமிழ்நாடு முழுவதும் நேற்று (மே.26) 310 திரையரங்குகளில் வெளியானது.


'டாடா' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமாரின் ஒலிம்பியா பிக்சர்ஸின் சமீபத்திய வெளியீடான 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில், அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க சை கௌதம ராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் 310 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில், ஒட்டுமொத்த அணியினரும் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிலையில், விழாவில் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பேசுகையில், “2023 ஆம் ஆண்டு ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய வருடமாக அமைந்துள்ளது. ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியுடன் இந்த ஆண்டு துவங்கியது. இப்போது எங்களின் சமீபத்திய வெளியீடான ‘கழுவேத்தி மூர்க்கன்’ மூலம் இன்னொரு வெற்றியைப் பரிசாகக் கொடுத்துள்ளோம்.


தமிழ்நாடு முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பைப் பெற்று வருவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மீண்டும் எங்கள் படத்தை வெளியிட்டதற்காக நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இது எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி. இயக்குநர் சை கௌதம ராஜின் அசாதாரண உழைப்புக்கும், கதை சொல்லலில் சரியான எமோஷன் மற்றும் பொழுதுபோக்கையும் கொண்டு வந்திருக்கும் அவரது திறமைக்கும் நன்றி.


அருள்நிதி தனது நம்பிக்கைக்குரிய நடிப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் முழு படத்தையும் உயர்த்துவதில் மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார். துஷாரா, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக தங்கள் பணியை செய்துள்ளனர்.


தொழில்நுட்ப வல்லுநர்களின் சிறந்த ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன். படத்தைப் பற்றி தங்கள் அன்பைக் காட்டியதற்கும், நேர்மறையான வார்த்தைகளைப் பகிர்வதற்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. ஒலிம்பியா பிக்சர்ஸ் உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைகளை ஈர்க்கும் உள்ளடக்கம் சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரிக்கும்" என்றார். 




'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


'கழுவேத்தி மூர்க்கன்' படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் 'ராட்சசி' புகழ்) எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்க, டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.