இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரோஜா படம் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேசிய விருது பெற்ற ரஹ்மான் தற்போது உலகளவில் அறியப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருக்கிறார்.
இதற்கிடையே சிந்துபைரவி, புன்னகை மன்னன் படங்களில் பணியாற்றியபோது கே. பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் ரஹ்மானை பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்ற பேச்சு கோலிவுட்டில் இன்றுவரை உண்டு.
இந்நிலையில் கவிதாலயா நிர்வாகியும், நடிகருமான கவிதாலயா கிருஷ்ணா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.
மேலும் அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “இளையராஜாவுடனான கருத்து வேறுபாட்டுக்கு பிறகுதான் ரஹ்மானை பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்பதில் உண்மையில்லை.
ரோஜா படம் ஆரம்பிக்கும்போது மணிரத்னம் இளையராஜாவிடம் பேசவிருப்பதாக சொன்னார். பாலசந்தரும் அதற்கு ஒத்துக்கொண்டார். இளையராஜா அந்த சமயத்தில் மிகவும் பிசியாக இருந்தார்.
அண்ணாமலையை பொறுத்தவரையும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டியது. இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். அதனால் இளையராஜா படத்திற்கு வேண்டாமென்று எல்லாம் கேபி சொல்லவில்லை.
ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது சின்ன சின்ன ஆசை பாடல் கேசட்டை எடுத்துக்கொண்டு என்னை இயக்குநர் வர சொன்னார். இரவு ரஹ்மான் ஸ்டூடியோ போனேன் அப்போது இன்று கொடுத்துவிடலாம் என ரஹ்மான் சொன்னார். அதன்படி எடுத்து சென்றேன். பாடலை மூன்று முறை கேட்டார்.
பிறகு ரஹ்மானுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும். நீ பெரிய சூப்பர் ஸ்டாராக வருவாய் என்றார்.
நான் நடிகனே இல்லை கே.பி மேஸ்திரியாக இருந்திருந்தால் சித்தாளாகியிருப்பேன். அவர் இசையமைப்பாளராக ஆகியிருந்தால் நான் தம்புரா வாசித்திருப்பேன். அவர் இயக்குநரானார் நான் நடிகன் ஆனேன்.
காதல் வாங்கி வந்தேன் என்ற டெலிஃபிலிம் செய்தேன். அதில் மது அருந்துவது போல் நடித்தேன். நான் மது அருந்தியதே இல்லை. அவரும் அருந்தியது இல்லை.
அவரிடம் ஒருவர் சென்று நீங்கள் நடித்தது போல் இல்லை என்றார். அதற்கு உடனே பாலசந்தர், ‘கிருஷ்ணன் நடித்தால் எப்படி நான் நடித்தது போல் இருக்கும். நான் நடித்தால்தான் நான் நடித்தது போல் இருக்கும். சிவாஜி நடித்தால் கிருஷ்ணன் நடித்தது போல் இருக்குமா’ என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்