நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பேரன்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை முடித்து இந்தியா திரும்புகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 2011-ஆம் ஆண்டு தான் ரஜினிகாந்துக்கு முதன்முதலாக உடல்நிலை சற்று கவலை தரும் வகையில் பாதிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் ரா ஒன் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து முடித்திருந்தார். அத்துடன் உடல்நலன் குன்றவே, முதலில் சென்னை போரூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது உறுதியானது. சிலகாலம் அங்கேயே தங்கியிருந்த ரஜினிகாந்த் மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 






மவுன்ட் எலிசபெத் ஆசியாவின் மிகச்சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அம்மருத்துவமனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதால் பல்வேறு வதந்திகளும் பரவின. இதனால், மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டார்.


அதில், "என் மேல நீங்க இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க, உங்களுக்கு நான் திரும்ப என்ன செய்யப்போறேன்? எனக்கு கடவுள் அருள் இருக்கு, நான் இப்ப ஜாலியா கிளம்புறேன், சீக்கிரமே திரும்பித் வருவேன்," என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். அவரின் பேச்சுதான் பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், அடுத்த சூப்பர்ஸ்டார் என்று எழுந்த சலம்பல்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. சிகிச்சை முடிந்து திரும்பியவுடன் 2014-ஆம் ஆண்டில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில்தான் அவர் நடித்தார். அதனால் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்திகளும் கிளம்பின. ஆனால், அதன்பின் லிங்கா படத்தில் நடித்தார். மேலும்  தொடர்ச்சியாக தற்போதுவரை நடித்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் பிரபல கவிஞர் வைரமுத்து. கவிதை விடிவில் வெளியிடப்பட்ட அந்த பதிவில் 'அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்'. என்று குறிப்பிட்டு அந்த பதிவை பகிர்ந்துள்ளார்.