கண்ணதாசனின் கவிதைகள் ஒவ்வொன்றும் தொட்டில் தொடங்கி இடுகாடு வரை நம் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது. அப்பேற்பட்ட கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அவரது மகள் ரேவதி சண்முகம். 


அவருடைய பேட்டியிலிருந்து..


நான் இன்று சமையல் கலைஞராக பிரபலமாக இருக்கலாம். ஆனால், இப்பவும் என்னை யாரேனும் வெளியில் பார்த்தால் என் தந்தையை வைத்தே என் அடையாளம் கூறுகின்றனர். நீங்கள் கண்ணதாசனின் மகள் தானே. உங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி. உங்களைத் தொட்டால் கண்ணதாசனை தீண்டியதுபோல் உணர்கிறோம் என்று கைகொடுத்து பெருமிதம் கொள்கிறார்கள். அந்த தருணத்தில் தான் நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தை உணர்கிறேன்.
என் குடும்பமே ஒரு பல்கலைக்கழகம் தான். நாங்கள் அப்பாவுக்கு மொத்தம் 15 பிள்ளைகள். பெரியம்மா வீட்டில் 4 பையன்கள், 3 பெண்கள், எங்கள் வீட்டில் 7 பேர், கடைசியாக விஷாலி. அப்பாவுக்கு பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம். அப்பாவுக்கு மூன்று மனைவிகள். பெரியம்மாவும் அம்மாவும் ஒன்றாகத் தான் இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் இருந்தார்கள். விஷாலி அம்மாவுடன் பெரிய தொடர்பு இல்லை. அம்மா இறந்தவுடன் பெரியம்மா தான் எல்லாம் செய்தார். 


அப்பாவுக்கு எல்லா குழந்தைகளிடமும் ஆசை பாசம் அதிகம். அப்பா குழந்தைகளை கொஞ்சும்போதே கலாட்டா செய்து தான் கொஞ்சுவார். கலைவாணன் அப்பா என்னைப் பற்றி பாட்டு எழுதலியான்னு கேட்டா ஏன் பிறந்தாய் மகனே பாடல் உன்னை நினைத்துதான் எழுதினேன் என்றார். அதேபோல் நாங்கள் எல்லாம் போட்டிக்கு அப்போ எங்களைப் பற்றி என்று கேட்க ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்று கூறினார்.




வீட்டில் கிண்டலும் கேலியுமாகத் தான் இருப்பார். அம்மா பார்வதி 3வது தான் படித்திருந்தார் என்பதால் அப்பா அவரைப் பார்த்து கவிஞன் பாடுவது தமிழ்ப்பாட்டு, அவன் கட்டிக்கொண்ட பெண்ணோ கைநாட்டு என்று சொல்லி கிண்டல் செய்வார். அப்பா யாரையும் புண்படுத்தாமல் நையாண்டி செய்வார். அப்பாவுக்கு பிள்ளைகள் அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகள் கண் கலங்கவே கூடாது. வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை வீட்டில் காட்டவே மாட்டார்.


அப்பா 4, 5 முறை அழுது பார்த்திருக்கிறேன். அண்ணா, நேரு மறைவுக்கு அப்பா வெடித்து அழுது பார்த்துள்ளேன். அம்மாவின் அம்மா இறந்தபோது அப்பா அழுதார். அப்பா அவருடைய மனக் கஷ்டங்களை ரொம்பவே அரிதாகத் தான் காட்டுவார். அதுபோல் ஒரு தீபாவளி நாளில் அழுதார். எல்லோரும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் அப்பா எங்களுக்கு துணி வாங்கி கொடுங்கள் என்று கேட்டபோது அழுதார். அவர் அண்ணனிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரவில்லை. தீபாவளிக்கு துணி எடுத்துத்தர இயலாமல் போனதை நினைத்து அழுதார். அந்த சமயம் தான் பழநி பட வாய்ப்பு வந்தது. தன் அண்ணனை நினைவில் கொண்டு அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடலை அப்பா எழுதினார். ஆயிரம் பேர் ஆயிரம் உள் அர்த்தம் சொன்னாலும் அப்பா இந்த காரணத்துக்காகத் தான் அந்தப் பாடலை எழுதினார்.