கவின் (Kavin) நடித்துள்ள ஸ்டார் படம் சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து  வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கவின் - ஆண்ட்ரியா இணைந்து நடிக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.


அடுத்தடுத்து ஆங்கில படத்தலைப்பு


வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் ஃபிலிம்ஸ் மற்றும் ப்ளாக் மெட்ராஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் நடிகர் கவின் அடுத்ததாக நடிகை ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தினை விக்ரமன் அசோக் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


பிரபல ஹாலிவுட் படத்தின் தலைப்பான மாஸ்க் (Mask) எனப்படும் தலைப்பு கவின் - ஆண்ட்ரியா இணையும் இந்தப் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியான கவினின் முந்தைய திரைப்படங்களான லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய படங்களின் தலைப்பும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இப்படத்தின் பூஜை வீடியோவை நடிகர் கவின் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.


 






ஸ்டார் வசூல் நிலவரம்


ஸ்டார் திரைப்படம் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 14.27 கோடிகளை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் முன்னதாகத் தகவல் பகிர்ந்துள்ளது. இப்படத்தினை பியார் பிரேம காதல் படத்தினை இயக்கிய இளன் இயக்கிய நிலையில், நடிகர்கள் லால், கீதா கைலாசம், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது.


அடுத்தடுத்த படங்கள்


இதனிடையே நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில நாள்களுக்கு முன்னதாக வெளியானது. பிரபல இயக்குநரான நெல்சன் ஃபிலமெண்ட் பிச்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பிளடி பெக்கர் எனும் திரைப்படத்தின் இந்தத் தலைப்பு மற்றும் ஜாலியான ப்ரோமோ வீடியோ வெளியாகி லைக்ஸ் அள்ளியது. சிவபாலன் முத்துக்குமார் இப்படத்தினை இயக்க, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.


இது தவிர ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பில், அயோத்தி படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி உடன் கவின் இணைந்துள்ள கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?