Rohit Sharma: ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள், எழுந்து நின்று கைகளை தட்டி வழியனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


அரைசதம் விளாசிய ரோகித் சர்மா:


ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில், மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 68 ரன்களை விளாசினார். இந்த சிறப்பான இன்னிங்ஸ் மூலம், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த அவரது மோசமான ஃபார்ம் முடிவுற்றது. அவரது அபாரமான ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவாவிட்டாலும், அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு நன்மையாக கருதப்படுகிறது.






எழுந்து நின்று கைகளைதட்டி வழியனுப்பிய ரசிகர்கள்: 


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது போன்ற மோசமான எண்ணங்களுடன் இறங்கினாலும், தொடக்கப்போட்டிகளில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு எதிராக ஒரு சதமும் விளாசினார். ஆனாலும், கடைசியாக விளையாடிய ஆறு போட்டிகளில் 4 முறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து, ஃபார்ம் இழந்து காணப்பட்டார். இந்நிலையில் தான், நடப்பு தொடரில் மும்பை அணியின் கடைசி போட்டியில், உள்ளூர் மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அவர் ஆட்டமிழந்ததும் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று, கைகளை தட்டி ரோகித் சர்மாவை கவுரவப்படுத்தினர்.






மும்பை அணிக்காக கடைசி போட்டி?


ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து மும்பை அணியில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட மாட்டார் என பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அண்மையில், இதுவே எனது கடைசி தொடர் என்பது போல ரோகித் சர்மா பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில், நேற்றைய போட்டி தான் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி எனவும், இதை உணர்ந்தே மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்துநின்று கைதட்டி ரோகித் சர்மாவை வழியனுப்பி வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர். மும்பை அணிக்கான கடைசி போட்டியில் உங்களது ரசிகர்களுக்காக அபாரமான இன்னிங்ஸை வெளிப்படுத்தியதற்கு நன்றி எனவும் ரோகித் சர்மாவை குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். 


அடுத்த ஐபிஎல் தொடரில் புதிய அணியில் ரோகித் சர்மா இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.