’கௌன் பனேகா க்ரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற பெயரில் நடிகர் சூர்யா தொகுப்பாளராகப் பங்கேற்று ஒளிபரப்பாகியது. இந்தி மொழியில் தற்போது 13வது சீசனை எட்டியுள்ளது இந்த நிகழ்ச்சி. இதில் முதல் கோடீஸ்வரராக ஆக்ராவைச் சேர்ந்த 25 வயது ஆசிரியர் ஒருவர் வெற்றிபெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் 7 கோடி ரூபாய்க்கான கேள்வியின் போது விடை தெரியாததால் வெளியேறினார். 


7 கோடி ரூபாய்க்கான கேள்வியாக,அந்தப் போட்டியாளரான ஹிமானி பண்டேலாவிடம் நடிகர் அமிதாப் பச்சன், “கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆய்வுக் கட்டுரையை டாக்டர் அம்பேத்கர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் சமர்பித்து, அதற்காக 1923ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்றார்?” என்ற கேள்வியைக் கேட்டார். 



அதற்காக, The Want And Means Of India, The Problem Of The Rupee, National Dividend Of India, The Law And Lawyers.என்ற ஆய்வுத் தலைப்புகளுள் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 


இந்தக் கேள்வியின் போது, போட்டியாளர் ஹிமானி பண்டேலா விடை தெரியாத காரணத்தால் போட்டியில் இருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினார். அமிதாப் அவரிடம் ஒரு விடையைத் தேர்ந்தெடுக்குமாறு கூறியபோது, ஹிமானி National Dividend Of India என்ற விடையைத் தேர்ந்தெடுத்தார். எனினும் அவரது விடை தவறாக இருந்தது. சரியான விடை The Problem Of The Rupee என்ற ஆய்வுத்தலைப்பு, 



1923ஆம் ஆண்டு, The Problem Of The Rupee ஆய்வுக்கட்டுரைக்காக டாக்டரேட் பட்டம் பெற்றார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். அவரது ஆய்வுக்கட்டுரை பிரிட்டிஷ் இந்தியாவின் கரன்சி குறித்த கொள்கை மீது கேள்விகள் எழுப்பியது. அம்பேத்கர் தனது ஆய்வின் மூலம் அறிவுரைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியை உருவாக்கியது ஹில்டன் யங் கமிஷன். 


ஹிமானி பண்டேலாவால் 7 கோடி ரூபாய் பரிசை வெல்ல முடியவில்லை என்ற போது, அவருக்கு 1 கோடி ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது. இந்த வெற்றி குறித்து அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது பணத்தைத் தான் எப்படி செலவு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். மாற்றுத் திறனாளியாக வளரும் குழந்தைகளும், மற்ற குழந்தைகளும் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்ட விரும்புவதாகவும், அவர்களை UPSC, CPCS முதலான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா லாக்டவுன் காரணமாக நலிவடைந்துள்ள அவரது தந்தையின் தொழிலுக்கு உதவி, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார் ஹிமானி.