பிரபல நடிகை கத்ரீனா கைஃப் அரபிகுத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை பிரபல நடிகை கத்ரீனா கைஃப் மதுரை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அங்கு ஆய்வு மேற்கொள்ள வந்ததாக தெரிகிறது.மிகவும் எளிமையான ஆடையில் வந்த அவர் அங்கிருந்த குழந்தைகளுடன் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடினார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான கத்ரினா கைஃபுக்கும் நடிகர் விக்கி கௌசலுக்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் பல்வேறு இடங்களுக்கு கணவருடன் சென்று வந்த கத்ரீனா தற்போது மீண்டும் தொழிலில் கவனத்தை செலுத்தி வருகிறார். சல்மான் கானுடன் டைகர் 3, ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் ஆலியா பட் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் எதிர்மறை விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், ட்ரோல் கன்டென்டாக மாறி, இன்றும் அவை சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், படத்தை ரிலீஸிற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைத்தது , அதில் இடம் பெற்ற ‛அரபிக் குத்து’ பாடல் தான்.
அனிருத் இசையில் , ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த அந்த பாடல், லிரிக் வீடியோவாக வந்ததிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்பையும், வியூவ்ஸ்களையும் அள்ளியது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் விஜய்-பூஜாவின் வித்தியாசமான நடன அமைப்பு அந்த பாடல் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.
படம் வெளியான பிறகு படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வகையில் பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை 280 மில்லியன் பார்வையாளர்களை அடைந்து சாதனை படைத்து இருக்கிறது.