200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் 50,000 பிணையில் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமானது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் ஒரு குற்றவாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சேர்க்கப்பட்டர்.






மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு சுகேஷ் ஜாக்குலினுடன் பழகியிருக்கிறார். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சுகேஷ் தனது இன்னொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும்,  10 கோடி ரூபாயையும்  கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகைக்கு பிடிவாரண்ட் எதுவும் வழங்காத நிலையில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.


இதற்கிடையில், அதே வழக்கை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜரானார், ஜாக்குலின் பெர்னாண்டஸ்  ஆகஸ்ட் 29, 2022 அன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அவர் ஆஜராகவில்லை, எனவே அவர்களை விசாரணையில் சேருமாறு அவருக்கு  நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் ஜாக்குலினின் வழக்கறிஞர், அவர் விசாரணையில் கலந்து கொள்வதாகவும், விசாரணை நிறுவனத்திற்கு ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஜாக்குலினை செப்டம்பர் 26ம் தேதி ஆஜராகுமாறு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களை போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.




வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் ரூபாய் பிணையில் , இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு , அடுத்தகட்ட விசாரணையை இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 


Gucci, Hermes, Louis Vuitton ஆகிய விலை உயர்ந்த பிராண்ட்களின் பல்வேறு சொகுசுப் பொருள்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுகேஷ் ஜாக்குலிக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாகத் தந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஜாக்குலினுக்குக் கடிதம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகைகள் மீதான தன் அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த சுகேஷின் மாய வலையில் ஜாக்குலினைத் தவிர வேறு யாரும் விழவில்லை எனக் கூறப்படுகிறது.