தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருப்பவர் நடிகை கஸ்தூரி. இவர்  சர்ச்சையான சில கருத்துக்களால் அவ்வப்போது ட்ரெண்டாகி விடுவார். சினிமா பிரபலங்களை மட்டும் வம்புக்கு இழுக்காமல் அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்துவார். 


காவிரி நீர் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி சினிமாவில்  சாதி பற்றியும் கெட்ட வார்த்தை பயன்பாடு குறித்தும் பேசியுள்ளார். 


 



"எங்கேயுமே ஜாதி பார்ப்பது என்பது தேவையில்லாதது எனும் போது அது  சினிமாவில் மட்டும் எதற்கு? ஜாதி பார்த்து தான் சேர்த்துக்குவோம் என சொல்வது சினிமாவில் ரொம்ப புதுசா இருக்கு. தமிழ் சினிமாவில் இன்னைக்கு ஜாதி ரீதியாக படம் எடுப்பது ட்ரெண்டாக உள்ளது. அதை மேடைகளில் முற்போக்குதுவம் என சொல்வதையே நான் மறுக்கிறேன். அந்த போக்கு மிகவும் தப்பு". 


லியோ படத்தின் ட்ரைலரில்  நடிகர் விஜய் பேசியிருந்த கெட்ட வார்த்தை குறித்தும் பேசியிருந்தார் கஸ்தூரி. "தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகளையும் கொச்சை வார்த்தைகளையும் பயன்படுத்துவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. எங்கோ ஒரு முகம் தெரியாத நடிகர் சொல்லும் வார்த்தைக்கும் பான் இந்திய நடிகர் என இந்தியாவே உற்று நோக்கும் ஒரு நடிகரான விஜய் சொல்லும் வார்த்தைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒரு 'ஏ' சான்றிதழ் பெற்ற படத்தில் அப்படி பட்ட ஒரு வார்த்தையை சொல்லி இருந்தால் அது ஒரு சாராரை சார்ந்த படம் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு இளைஞர்களை காட்டிலும் ஏராளமான குழந்தைகள், பதின்பருவத்து ரசிகர் கூட்டம் அதிகம் உள்ளது. அப்படி இருக்கையில் நம்ம தளபதி சொல்லிட்டாரு என சொல்லி அவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அது நன்றாக இருக்காது. லியோ படத்தின் ட்ரைலரில் விஜய் பயன்படுத்திய கெட்ட வார்த்தை போலவே நடிகர் அஜித்தும் மங்காத்தா படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.


லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த கெட்ட வார்த்தை படத்தில் வராது என கூறியிருக்கிறார். நான் தான் விஜய் சாரை இந்த வார்த்தையை சொல்ல வைத்தேன் என கூறியிருக்கிறார். இது ஒரு கவன ஈர்ப்புக்காக சொல்லப்பட்டது எனச்சொல்ல முடியாது. விஜய் படத்துக்கு கெட்ட வார்த்தை சொல்லி தான் மக்களின் கவனம் பெற வேண்டும், ஓப்பனிங் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த காட்சியில் அந்த வார்த்தை பேசினால் மட்டுமே அந்த உக்கிரம் வரும் என சொன்னால் அது இயக்குநரின் தோல்வியாக தான் பார்க்க வேண்டும்" என செய்தியாளர்களிடம் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.