Just In





Kasturi Shankar: ‛அரசியலுக்காக சமரசம் செய்யும் கமல்’ ராஜராஜன் விவகாரத்தில் கஸ்தூரி தாக்கு!
ராஜராஜசோழன் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜராஜசோழன் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்வுகளில் ஒன்றான குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது.
வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் வெற்றிமாறன் கருத்துக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில்,ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம், சமணம் என இருந்தது என கமல் தெரிவித்தார். எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார். இதெல்லாம் சரித்திரம் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், கமல் ஒரு encyclopedia . அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து கொள்வது வருத்தம் . ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை.அந்த காலத்தில் homo sapiens என்ற பேரே இல்லை. so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்? என தெரிவித்துள்ளார்.