அரசியலை பணம் சம்பாதிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது என தான் நினைப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் கரு.பழனியப்பன்
1994 ஆம் ஆண்டில் இருந்து கரு.பழனியப்பன் திரைத்துரையில் இருந்து வருகிறார். புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடமும், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் இயக்குநர் எழிலிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு பார்த்திபன், சினேகா நடித்த பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். அந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு சிவப்பதிகாரம், 2008ல் பிரிவோம் சந்திப்போம், 2010 ஆம் ஆண்டில் மந்திர புன்னகை, 2011ல் சதுரங்கம் 2013 ஆம் ஆண்டில் ஜன்னல் ஓரம் படத்தையும் இயக்கினார். இதில் மந்திர புன்னகை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இதற்கிடையில் நட்பே துணை, கள்ளன், நதி, டி பிளாக், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் கரு.பழனியப்பன் தனது முத்திரையை பதித்துள்ளார்.
சின்னத்திரை பயணம்
இதற்கிடையில் சின்னத்திரையில் களம் கண்ட அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ”தமிழா தமிழா” நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக பார்வையாளர்களைப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் இருந்து தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் உரிமை எடுத்து பங்கேற்பவர்களையும் அவ்வப்போது கண்டிப்பார் கரு.பழனியப்பன். இது கடும் விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்போது அவர் வா தமிழா வா என்ற புதிய விவாத நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரை பார்வையாளர்களை மகிழ்விக்க வருகை தருகிறார். கலைஞர் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
அரசியல் பயணம்
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கரு.பழனியப்பன், தனது அரசியல் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “நேரடி அரசியலில் இறங்க விருப்பம் எனக்கு இருக்கும் நிலையில், அதற்கான பணம் என்னிடம் இல்லை. பணம் இல்லாதவர்களுக்கு அரசியலில் இடமிருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கு. மேலும் திமுக போன்ற கட்சிகளில் எளிய மனிதர்கள் இன்னும் பொறுப்பில் இருக்காங்க. அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிச்சு பிள்ளைகளை படிக்க வச்சுட்டு வரணும். என்னை பொறுத்தவரை பணம் சம்பாதிக்கிற இடமா அரசியலை பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.