ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் ட்ரெலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது இப்படம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில்
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மஹான் உள்ளிட்ட இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகின. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், “பேட்ட மாதிரியான மிகப்பெரிய ஒரு படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்படும் என்பதை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. என்னுடைய முதல் படமான பீட்சா படம் வெளியானபோது இருந்த பதற்றம் இந்தப் படத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தான் இன்ஸ்பிரேஷன்
தமிழ் சினிமாவின் முதல் கருப்பு நிற கதாநாயகன் என்ற தீமை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் தான் பல இடங்களில் ரஜினிகாந்தின் நடிப்பு வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி இருப்பதாக கார்த்திக் சுப்பாராஜ் கூறியுள்ளார். “எனக்குத் தெரிந்து கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே ரஜினிகாந்த் தான் முதல் கருப்பு நிற நடிகர் என்று நினைக்கிறேன். அதுவரை சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ஸ் எல்லாம் கூட வெள்ளை நிறத்தில் தான் இருந்தார்கள்.
இந்தப் படத்தை 1970இல் நடக்கும் கதை என்று நான் முடிவு செய்துவிட்டேன். ஆனால் குறிப்பாக 1975இல் நடக்கும் கதையாக எடுத்ததற்கு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது. 1975இல் தான் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். ரஜினி இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு தமிழ் கலாச்சாரத்தில் கருப்பு நிற ஹீரோ பற்றி எந்த மாதிரியான புரிதல் இருந்தது என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்” என்று கார்த்திக் சுப்பாராஜ் கூறினார்.
ரஜினி கமல் நடித்தால் எப்படி இருக்கும்
தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் ஒரு போஸ்டரை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை எடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் தான் ஒரு விஷயத்திற்காக அடிக்கடி ஆதங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஒருவேளை தான்1970களில் பிறந்திருந்தார் என்றால் நிச்சயமாக ஜிகர்தண்டா 2 படத்தை ரஜினி மற்றும் கமலை அதில் நடிக்க வைத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட அவரது துணை இயக்குநர் ஒருவேளை இந்தப் படத்தில் அவர்கள் இருவரும் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். இந்தப் போஸ்டர் ரசிகர்களுக்கும் கார்த்திக் சுப்பாராஜ் போன்ற அதே மனநிலையைதான் தருகின்றன.