செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படத்தில் நடித்த கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
யாரடி நீ மோகினி
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதியோ இந்தப் படம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கார்த்திக் குமார் நடித்திருந்த சீனு கதாபாத்திரம். வெப்பம், அலைபாயுதே, பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கார்த்திக் பின் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த கார்த்திக் சமீபத்தில் நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி படத்தில் நடித்தார் .
அடையாளமாகிப் போன ஒரு கேரக்டர்
‘யாரடி நீ மோகினி’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் சீனுவாகவே பதிந்துவிட்டார். இப்படத்திற்குப் பிறகு எத்தனையோ படங்களிலும் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் கார்த்திக் பங்கேற்றிருக்கிறார். ஆனால் இன்று வரை ரசிகர்கள் இவரை யாரடி நீ மோகினி படத்தின் வழியாகவே அடையாளம் காண்கிறார்கள். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் வெண்மேகம் பாடல் கார்த்திக்கின் அடையாளமாக மாறியிருக்கிறது என்று சொல்லலாம்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் வெண்மேகம் பாட்டில் நடித்தவர்தானே” என்று ரசிகர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்திக் கொஞ்சம் கிண்டல் கலந்த பதில் ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் “நான் என் வாழ்க்கையில் என்ன பண்ணாலும் நான் வெண்மேகம் பாடலில் நடித்த அந்த நபராக தான் பார்க்கப்படுவேன். யாரடி நீ மோகினி படத்தை தவிர நான் நடித்த மற்ற படங்கள் எல்லாம் வேறு ஒரு உலகத்தில் நடந்தது போல பார்க்கிறார்கள். நான் மட்டுமில்லை நீங்கள் நாம் எல்லாரும் வெண்மேகம் பாடலில் இருந்து வந்த கதாபாத்திரம் தான்” என்று அவர் இந்த வீடீயோவில் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Sandeep Reddy Vanga : ”அந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என்ற பாலிவுட் நடிகர்; விளாசித் தள்ளிய அனிமல் பட இயக்குநர்