ஆதில் ஹூஸை நடித்த காட்சிகளை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் நீக்கப் போவதாக சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். 


சந்தீப் ரெட்டி வங்கா


அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டவர் சந்தீப் ரெட்டி வங்கா. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகிய அனிமல் படத்தை இயக்கியிருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தை விட இருமடங்கு விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு குவிந்தன. நடிகர்கள், இயக்குநர்கள் , பாடலாசிரியர்கள் , விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினர் இந்தப் படத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். தன் படத்தை விமர்சனம் செய்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் திருப்பி விமர்சித்து வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரை கடுமையான தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார் அவர். 


இந்தப் படத்தில் நடித்ததற்கு வருத்தப் படுகிறேன்


பிரபல இந்தி நடிகரான ஆதில் ஹூஸைன். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அர்ஜூன் ரெட்டி படத்தைப் பற்றி பேசினார்.  அதில் ”அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை . எப்படியாவது இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்துவிடலாம் என்று நினைத்து வேண்டுமென்றே சம்பளத்தை அதிகமாக கேட்டேன் . ஆனால் அதையும் கொடுக்க படக்குழுவினர் சம்மதித்துவிட்டார்கள். எனக்கு கொடுக்கப் பட்ட ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு வந்துவிட்டேன். படம் வெளியானபோது நானும் என்னுடைய நண்பரும் அர்ஜூன் ரெட்டி படத்தை போய் பார்த்து பாதியிலேயே திரையரங்கத்தை விட்டு வெளியே வந்துவிட்டோம். என் வாழ்க்கையில் நான் நடித்ததற்காக வருத்தப்படும் ஒரே படம் அர்ஜூன் ரெட்டி தான் . என் மனைவி இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் என்னை திட்டியிருப்பார்” என்று அவர் கூறியிருந்தார்.


நீங்கள் நடித்த காட்சிகளை நீக்கி விடுகிறேன்






ஆதில் ஹூஸைன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நீங்கள் நடித்த 30 படங்களில் கிடைக்காத புகழ் என்னுடைய ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற படத்தில் கிடைத்தது. உங்கள் கலையைவிட உங்கள் பேராசை பெரிதாக இருக்கிறது. என்னுடைய படத்தில் உங்களை நடிக்க வைத்ததற்கு நான் வருத்தப் படுகிறேன். நீங்கள்  வெட்கப்பட தேவையில்லாதபடி  நீங்கள் நடித்த காட்சிகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயபடுத்தி உங்கள் முகத்தை நீக்கிவிடுகிறேன்” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.