Japan Movie Audio Launch: கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், தனது ஆரம்ப கால சினிமா அனுபவங்கள் மற்றும் சிவக்குமார் உடனான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார். 


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவும் திரைத்துறை பிரபலங்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், சிவக்குமார் உடனான நட்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 


“கார்த்தி வித்தியாசமாக நல்ல நல்ல படங்களைக் கொடுத்திருக்கார். நான் சினிமாவில் நடிக்க கோவையில் இருந்து வந்த போது ஆதரவு கொடுத்தவர் சிவகுமார்தான். நான் வந்த பிறகு தான் கார்த்தி பிறந்தார். சிவகுமார் ரொம்ப ஒழுக்கமானவர். அவரிடம் எந்தத் தப்பும் பண்ண முடியாது. எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் முன்னாடி அதை செய்ய முடியாது என்பதால் நான் சிறுவர்களாக இருந்த கார்த்தி, சூர்யா இருவரையும் அருகிலுள்ள நாயர் கடைக்கு அழைத்து சென்று ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு நான் சைடில் நின்னு தம் அடிச்சிட்டு வருவேன்.


சினிமாவில் 250 படங்கள் நடித்த எனக்கு 2 கேரக்டர்களை ரொம்ப பிடிக்கும். இன்று பெரியார் படத்தில் நடித்தது. அந்த கேரக்டர் சிவாஜி பண்ண விருப்பப்பட்டது. அதேபோல் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டர் எம்.ஜி.ஆர். பண்ண ஆசைப்பட்டது. அதை அன்பு தம்பி கார்த்தி பண்ணிருந்தாரு. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்து இருந்தால் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்ததற்காக ஆயிரம் முத்தங்களை பரிசாக கொடுத்திருப்பார். நான் சூர்யா, கார்த்தி இருவரும் சினிமாவில் நடிக்க வருவார்கள் என நினைத்துப் பார்க்கவில்லை. சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொண்டு நடிக்க வந்தவர் கார்த்தி“ என பேசியுள்ளார். 


பருத்தி வீரன் முதல் பொன்னியின் செல்வன் வரை கார்த்தி நடித்த அனைத்து படங்கள் நல்ல லாபத்தை கொடுத்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் மக்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த மாதம் 10ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.