மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் தேவைகளையும், குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அப்போது சீர்காழி தாலுக்கா அகணி கிராமத்தில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துகொண்டு அதற்குறிய தொகையை வழங்கிட வேண்டும் என்று கூறி, வீரமணி என்ற விவசாயி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுகுறித்து அவர் கூறுகையில், ''வெள்ள காலம், வறட்சிக் காலம் இரண்டிலும் பாதிப்பு ஏற்படுவதால் விவசாய பணிகளை தொடர முடியவில்லை என்றும், விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கி கடனாளியாக கஷ்டப்படுவதை விரும்பவில்லை என்றும், விவசாயத்தில் தொடர் இழப்பை சந்தித்து வருவதால் அகணி கிராமத்தில் உள்ள எனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்’’ என்று கூறி சீர்காழியை சேர்ந்த வீரமணி என்ற விவசாயி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
’’பயிர் பாதிப்படைந்த தனக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக மொத்தம் 2,319 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில், காப்பீட்டு நிறுவனம் 560 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, வருங்காலங்களில், காப்பீட்டு நிறுவனம் பயிர்ச்சேதம் குறித்த கணக்கெடுப்பை வேளாண் துறை, வருவாய்த்துறை மற்றும் முன்னிலையில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழக அரசே காப்பீட்டை ஏற்று நடத்த வேண்டும்’’ என்றும் அன்பழகன் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ’’நடப்பு சம்பா, தாளடி பருவ சாகுபடி இலக்காக 74,341 ஹெக்டேர் பெறப்பட்டுள்ளது. இதில் சம்பா சாகுபடி பரப்பு இலக்காக 36,401 ஹெக்டேரும் மற்றும் தாளடி பருவ சாகுபடி இலக்காக 37,940 ஹெக்டேரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.
இதில் தற்போது வரை 15,201 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 9370 ஹெக்டேரில் சாதா நடவும் மற்றும் 28229 ஹெக்டேரில் திருந்திய சாகுபடி பரப்பளவு ஆக கூடுதலாக 52800 ஹெக்டேர் பரப்பில் சம்பா, தாளடி பருவத்தில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான 445.2 ஹெக்டேர் அளவில் சாதா நாற்றங்காலும், 223.4 ஹெக்டேர் அளவில் திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலும் கூடுதலாக 668.6 பரப்பில் சம்பா, தாளடி நாற்றங்காலும் உள்ளது.
நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51, சி.ஆர்.1009, சப்-1, டி.கே.எம்.13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 17.50 ரூபாய் மானியமும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை விவசாயிகளுக்கு 680.52 மெ.டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 222.41 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் 1562 மெ.டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு 406 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.