ஜப்பான்
கார்த்தி நடித்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. குக்கூ , ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து ராஜூ முருகன் தனது நான்காவது படத்திற்காக கார்த்தியுடன் ஜப்பான் படத்தில் இணைந்துள்ளார். சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார், அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.
கார்த்தி 25
நடிகர் கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 10 ஆம் தேதி வரை நாளுட்க்கு ஆயிரம் மக்கள் வீதம் 25 நாட்களுக்கு 25000 மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
பொதுவாக உணர்வுப் பூர்வமாக சமூக கருத்துக்களை கதைக்களமாக வைத்து படங்களை இயக்கும் ராஜு முருகன் இந்த முறை முற்றிலும் புதிய கதைக்களம் ஒன்றினை தொட்டிருக்கிறார். அதுவும் இந்த டீசரை பார்க்கும் போது ஜப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது.
டீசர் கதை
மிகப்பெரிய பான் இந்திய திருடனான ஜப்பான் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விடுகிறார். உல்லாசமாக ஆடலும் பாடலுமாக இருக்கும் ஜப்பானை தேடி பல்வேறு குழுக்கள் புறப்படுகின்றன. ஒரு கட்டத்தில் ஜப்பானை கண்டுபிடித்து சுற்றி வளைத்த பின்னர் தன்னுடைய மாஸை காட்டுகிறார் கார்த்தி. இப்போதெல்லாம் மெஷின் கன் இல்லாத படத்தையே பார்க்க முடியவில்லை அதே போல் இந்தப் படத்திலும் துப்பாக்கி சுடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படத்தில் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கார்த்தி தான் அதிக ரசித்து நடித்த கதாபாத்திரம் ஜப்பான் என்று பதிவிட்டுள்ளார். அப்படி ஜப்பான் படத்தில் என்னதான் சிறப்பு என்கிற ஆர்வம் அதிகமாகி இருக்கிறது.