நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட்டுகள் அதிக லாபத்துக்கு விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்துள்ளது. 


தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் நாளை (அக்டோபர் 19) லியோ படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா,ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன்,  பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 


மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள லியோ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது. ஆங்காங்கே முதல் நாளில் முதல் இரண்டு காட்சிகள் தவிர்த்து, மதியத்திற்கு மேல் உள்ள காட்சிகளுக்கு முன்பதிவு ஆரம்பமானது. கடந்த பொங்கலன்று விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் வெளியானது. இதில் துணிவு படத்துக்கு முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு வழங்கப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். 


இதற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த 10  மாதங்களாக எந்த படங்களுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. மாறாக, காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வழங்கப்பட்டது. இப்படியான நிலையில்  லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசை நாடியது. ஆனால் இதில் ஏமாற்றமே மிஞ்சியது. 


இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு காட்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  டிக்கெட்டுகளை புக் செய்ய சென்றால் புக் மை ஷோ, டிக்கெட் நியூ இணையதளங்கள் அனைத்து நேரமும் முடங்கியே கிடக்கின்றன. மேலும் பல தியேட்டர்கள் டிக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் டிக்கெட் கிடைத்தவர்கள் அதனை கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தில் வெளியில் விற்பனை செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குமுறி வருகின்றனர். சர்வ சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் டிக்கெட்டுகள் பேரம் பேசப்படுகிறது.