சர்தார் 2
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாத் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது 20 அடி உயரத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை இன்று உயிரிழந்தார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி வந்த விடுதலை படத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது கார்த்தி படத்தின் படப்பிடிப்புன் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலை உயிரிழந்துள்ள செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் துறையில் பணியாற்றும் லைட்மேன் , ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் பிற தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது