சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன் சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.




                                                                             ஆடித்தபசு திருவிழா


சங்கரநாராயணர் ஆலயம் புன்னை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோயில் ஒன்பது ராஜ கோபுரங்களைக் கொண்டது. சங்கரரும் நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது. ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.




                                                                         சங்கரநாராயணர் கோயில்


சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். சங்கரநாராயணர் கோயிலில் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தில் உத்தராடம் நட்சத்திரத்தில் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். சங்கன், பதுமன் ஆகிய இரு நாகர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வங்களான சிவன், திருமால் ஆகியோரில் யார் பெரியவர் என வாதம் நடத்தியதுடன் அம்பாளிடம் வந்து முறையிட்டனர். அவர் சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான், அம்பாளை பொதிகைமலையில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படிக் கூறினார். அதன்படி அவர் தவம் செய்தார். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி ஈசன், சங்கரநாராயணராக காட்சியளித்தார். அதுவே தபசுக் காட்சி வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. 




இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார்.


                                                                              சங்கரநாராயணராக காட்சி


ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார்.




                                                                              நோய் தீர்க்கும் புற்றுமண்


இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும், புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்ட விடாமல் குடும்பத்தை காக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக் கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.