பருத்தி வீரன் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. என்னதான் தனது அப்பா மற்றும் அண்ணன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்க நடிகர்களாக இருந்தாலும் , தனது கடின உழைப்பு மற்றும் தனித்துவ நடிப்பால் ரசிகர்களை முதல் படத்திலேயே வெகுவாக கவர்ந்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்தி தற்போது மணிரத்தினம் இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்னும் வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதுன் குறிப்பிடத்தக்கது. கார்த்தி தற்போது மண்வாசனை மணக்க மணக்க படங்களை உருவாக்கும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மதுரை பக்கம் சென்ற கார்த்திக்கு பொதுமக்கள் உற்ச்சாக வரவேற்ப்பு கொடுத்ததுடன் பருத்தி வீரன் படத்தில் அவர் நடித்ததை குறித்தும் அவரிடம் அதிகமாக பேசியுள்ளனர். இதனால் நெகிழ்ந்து போன கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ 14 வருடங்களுக்கு பிறகு விருமன் படத்திற்காக மதுரை வந்திருக்கிறேன்.மக்கள் இன்னும் பருத்திவீரன் படம் குறித்து பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஊர் மக்களின் அன்பு இன்னமும் மாறவில்லை. மிகவும் ஆசிரவதிக்கப்பட்டவனாகவும் , நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன் “ என குறிப்பிட்டு அப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
2015 ஆம் வெளியான கொம்பன் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் கார்த்தி முத்தையா கூட்டணி ஹைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. படத்தில் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார் அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் விருமன் படம் மூலம் மீண்டும் கிராமத்து கதையை கையில் எடுத்திருக்கும் முத்தையா அந்த படத்தை வெகுவாக நம்பியுள்ளாராம். விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்