லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை கரீனா கபூர், அப்படத்தின் ஹீரோவான அமீர் கானுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் “லால் சிங் சத்தா” படம் வெளியானது. இந்த படத்தில் அமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் . லால் சிங் சத்தா படத்தை அமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த நிலையில், இதன் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான Forrest Gump இன் ரீமேக்காகும்.
ஆனால் லால் சிங் சத்தா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. சரியாக படம் ரிலீசாவதற்கு முன், கடந்த 2015 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில், ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டார்’ என கூறிய பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாக தொடங்கியது. இதனால் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கேப்ஷன் ட்ரெண்ட் ஆனது.
இதுவே படத்துக்கான தோல்வி காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படியான நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பிறகு, கரீனா கபூர், அமீர்கானுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார். அதில் படத்தின் தோல்விக்கு பிறகு தான் அமீர் கானை சந்தித்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.
அதில், அமீர்கான் முகத்தை நான் பார்த்தேன். அந்நேரம் அவரது முகத்தில் இருந்த உணர்வுகள் என்னிடம் மன்னிப்பு கேட்பதோடு வருத்தப்படுகிறார் என புரிந்து கொள்ள முடிந்தது.லால் சிங் சத்தாவுக்கு முன்னால், நாங்கள் 3 இடியட்ஸ் மற்றும் தலாஷ் போன்ற பெரிய படங்களை வழங்கியுள்ளோம். இதனையடுத்து நான் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் இருவருக்கும் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்,
அப்பதிவில், “நம் உறவுகளும் திறமையும் ஒரு படத்தின் முடிவைப் பொறுத்தது அல்ல. நான் நடித்த ரூபா கேரக்டரின் நடிப்பு எப்போதும் தனக்கு அடையாளமாக இருக்கும். மேலும் லால் சிங் சத்தா திரைப்படம் மனதைக் கவர்வதாக குறிப்பிட்ட நான், அமீர்கான் நடிப்பைப் பாராட்டினேன். கொரோனா தொற்றுக்கு பிறகு, மக்கள் கனமான மற்றும் சோகமான படங்களை காட்டிலும், தங்களை உற்சாகமாக எதையாவது தேடுகிறார்கள். அதுவே படத்தின் தோல்விக்கான காரணமாக இருக்கலாம். அதனால் வருத்தப்பட தேவையில்லை” என தான் குறிப்பிட்டதாக கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Leo Release Time: “லியோ படத்துக்கு இங்கு மட்டுமே அதிகாலை 4 மணி காட்சிகள்” .. விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி..!