பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷனில் சல்மான் கானுக்கு பதிலாக நடிகர் கரண் ஜோகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் கடந்த சீசனில் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக மாறி அசத்தியிருந்தார். இதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தொடங்கப்பட்ட போது முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் பட பணிகளுக்காக விலகினார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் தொகுப்பாளர் ஆனார்.
தமிழைப் போலவே தெலுங்கு, இந்தியிலும் அவ்வப்போது தொகுப்பாளர் மாற்றம் என்பது நடைபெறும். அந்த வகையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் தொடங்கியது. இதில் அப்து, அங்கித், அர்ச்சனா, கௌதம், கோரி, எம்சி ஸ்டான், நிமிரித், பிரியங்கா, சஜித், ஷாலின், சிவா, சௌந்தர்யா, டீனா, மான்யா, ஸ்ரீஜிதா, சும்புல் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற நிலையில் மான்யா, ஸ்ரீஜிதா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் இம்முறை சம்பளம் தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அவர் விளக்கமளித்த நிலையில் தற்போது சல்மானுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வார இறுதியில் நடக்கும் எபிசோட்களை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடையளிக்கும் வகையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் சல்மான் கான் வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை கரண் ஜோகர் தொகுத்து வழங்கவுள்ளார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பிரபலங்களையும் தனது கேள்வியால் அதிர வைக்கும் கரண் ஜோகர் வந்தால் நிச்சயம் நிகழ்ச்சி களைக்கட்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.