தீப ஒளி திருநாள் வருகின்ற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை அனைத்தும், தொடர்ச்சியாக வருவதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, தீப ஒளி திரு விழாவை கொண்டாடுவதற்காக புறப்பட்டு செல்கின்றனா். இதனால் பேருந்துகள் , ரயில்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது. 

 

50,000 பயணிகளை கடந்தது

 

இதையடுத்து சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இறுதி நேரத்தில் பயணிகள் பலா், விமானங்களில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் ஒட்டுமொத்தமாக சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது. 



சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும்,பல மடங்கு உயர்ந்துள்ளது. தீப ஒளி திருநாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால், சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளன.

 

கட்டணங்கள் உயர்வு

 

சென்னை டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ 6,000. தற்போது ரூ.12,000 -ரூ18,000 வரை. சென்னை கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ. 6,500. தற்போது ரூ.15,000-ரூ.17,000. சென்னை புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000- ரூ.13,000 வரை. சென்னை கொச்சி வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.9,000.

 

சென்னை திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ. 5,000. தற்போது ரூ. 12,000,-21,000. அதைப்போல் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000. சென்னை திருச்சி வழக்கமாக ரூ. 3,500.ஆனால் தற்போது ரூ.11,500.சென்னை தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500 - ரூ.11,500. சென்னை கோவை வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.11,500. 



இதைப்போல் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீப ஒளி திருவிழாவை கொண்டாடும் ஆா்வத்தில் கட்டணம் பற்றி யோசிக்காமல், ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர். இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதைப்போல் முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால், குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விடுவதால், அதிக கட்டணம் டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன. 



எனவே வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் தான் இருக்கிறது என்று கூறுகிறோம். பயணிகள் கட்டணம் பற்றி பொருட்படுத்தாமல், பயணிக்கின்றனா். இதைப்போல் அதிக கட்டணம் கொடுப்பதை தவிா்க்க, பயணிகள் முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தால், தற்போது குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்று கூறுகின்றனர்.