2022ம் ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட்டின் முக்கியமான போட்டிகளான சூப்பர் 12 சுற்று இன்று முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றது. அதில் தகுதி சுற்று போட்டியில் 8 அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து நான்கு அணிகள் தேர்வாகிய நிலையில், பெரும் ஏமாற்றமாக இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி உள்ளது.


ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியாவுக்கான முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. அதில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பையில் பல அணிகள் தங்களது முழு பலத்தையும் இறக்கி உள்ளனர். பலரால் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை உள்ளது. ஆனால் முதன் முறையாக உலகக்கோப்பையில் விளையாடப் போகும் வீரர்கள் இந்த உலகக்கோப்பையில் அதிகம். இந்த இளம் வீரர்களில் எந்த நான்கு பேர் அதிகம் தாக்கம் ஏற்படுத்துவார் என்ற கணிப்பு இதோ. 



1. கேமரூன் க்ரீன்


இந்த அரிய திறமைகள் கொண்ட வீரரை உலகக்கோப்பை காண தவறியிருக்கும். ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியதால், கடைசி நேரத்தில் அணிக்குள் திரும்பி இருக்கிறார். இவர் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த வாய்ப்புகளை பெற்றார்.


ஒருநாள் போட்டியில் மீடியம் பேசரான இவர் ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்த ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக இரண்டு ஒருநாள் மற்றும், T20I களில் அவர் நுழைவதற்கு வழி வகுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொஹாலியில் இந்தியாவுக்கு எதிராக அவர 30 பந்துகளில் 61 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களை வேட்டையாடியதன் மூலம் ஆஸ்திரேலியா 200 ரன்களை தாண்டி வலுவான ஸ்கோரை எட்டி போட்டியையும் வென்றது.


இதற்கு முன், டி20களில் கிரீனின் அதிகபட்ச ஸ்கோர் 36 ஆக இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய வீரர் இவர். தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது ஃபினிஷராகவோ பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்துடன், தனது முதல் T20 உலகக் கோப்பையை விளையாடும் கிரீன், X-ஃபேக்டராக கேப்டன் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான அணியில் இருக்க விரும்புவார் என்று தெரிகிறது.


டி20களில் செயல்பாடு:


போட்டிகள்: 7


ரன்கள்: 136


சராசரி: 19.42


ஸ்ட்ரைக் ரேட்: 174.35


அதிகபட்சம்: 61


ஃபிப்ட்டி: 2


செஞ்சுரி: 0


விக்கெட்டுகள்: 5


சிறந்த பந்துவீச்சு: 2/16


எகனாமி: 9.16



2. நசீம் ஷா


இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, நசீம் ஷா ஒரு சர்வதேச ஒயிட் பால் கிரிக்கெட்டில் கூட விளையாடவில்லை. அந்த இடத்தில் இருந்து பாகிஸ்தானில் முக்கியமான பந்துவீச்சாளராக மிகக்குறுகிய காலத்தில் வளர்ந்து, வெறும் 2 மாதங்களில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். 19 வயதான அவர் தனது 16 வயதில் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிவிட்டார்.


பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சமீபத்திய பரபரப்பு இவர்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஹாட்ரிக் எடுத்த இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். காயம் காரணமாக இந்த வருட ஆரம்பம் அவருக்கு தோதாக இல்லை. அதன் பிறகு பாகிஸ்தான் பவுலர்கள் காயம் காரணமாக ஆசியக்கோப்பை அணிக்குள் வந்தார். ஆசியக் கோப்பையில் டி20 போட்டிகளில் தனது முதல் ஓவரில் கே.எல். ராகுலை வெளியேற்றினார். இதுவே பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை அணியில் அவர் தேர்வாவதற்கான வாயில்களைத் திறந்தது.


நசீம் ஷா செயல்பாடுகள்


போட்டிகள்: 9


விக்கெட்டுகள்: 11


சிறந்த பந்துவீச்சு: 2/7


எகனாமி: 7.89



3. ஃபின் ஆலன்


முதல் டி20 உலகக் கோப்பை கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ள நியூசிலாந்து அணியின் தீப்பொறியாக ஃபின் ஆலன் இருப்பார். இந்த வலது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கடந்த ஆண்டு T20 உலகக் கோப்பையை தவறவிட்டிருக்கலாம். ஆனால், ஸ்காட்லாந்திற்கு எதிரான அவரது சதம் மற்றும் T20I முத்தரப்புத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் அவரை ஒரு தவிர்க்கமுடியாத வீரராக மாற்றியது. பங்களாதேஷுக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் எடுத்ததன் மூலம் பிரபலமான 23 வயதான ஆலன், மீண்டும் ஆக்லாந்தில் பங்களாதேஷுக்கு எதிராக 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேகத்திற்கு எதிராக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். T20 உலகக் கோப்பையில் எந்த அணியும் இந்த வீரரின் அதிரடியை எளிதில் எடுத்துக்கொள்ளாது.


இவரது செயல்பாடு


போட்டிகள்: 18


ரன்கள்: 469


சராசரி: 26.05


ஸ்ட்ரைக் ரேட்: 161.72


அதிகபட்சம்: 101


ஃபிப்ட்டி: 2


செஞ்சுரி: 1



4. அர்ஷ்தீப் சிங்


இந்தியன் பிரீமியர் லீக்கின் 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்ஷ்தீப் சிங் யார்க்கர்கள் மற்றும் டெத்-பவுலிங் திறமையால் புகழ் பெற்றார். 2018 U-19 உலகக் கோப்பையில் அவரது பந்துவீச்சு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் மீது அழுத்தங்கள் விழுந்தாலும் அதனை எதிர்கொண்டு எழுந்து நிற்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் சொதப்பிய அவர் மீது வெறுப்புகளை உமிழ்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பதிலாக தனது கம்பேக்கை கொடுத்தார். அவர் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைக்க ரோஹித் ஷர்மா தொடர்ந்து அணியில் வாய்ப்பு கொடுத்தார். பும்ரா இல்லாத குறையை தீர்க்க இவரால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை இவரும் ரோஹித் ஷர்மாவுக்கு திருப்பி அளித்திருக்கிறார். 


இவரது டி20 செயல்பாடுகள்


போட்டிகள்: 13


விக்கெட்டுகள்: 19


சிறந்த பந்துவீச்சு: 3/12


எகனாமி: 8.14