ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்டோர் நடித்து தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சமீபத்தில் ரிலீசானது 83 படம். 1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


83 படம் 2021 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற தவறி விட்டது. கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த சமயம் என்பதால் தியேட்டர்களுக்கு வர மக்கள் தயக்கம் காட்டினர். இதுவே 83 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகி எல்லோராரலும் பாராட்டப் பெற்று வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், பல பிரச்சனைகள் எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்க்கப்பட்டு தேதி கூறப்படாமல் சர்ப்ரைஸாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.



83 உலக கோப்பையின் ரியல் ஹீரோவான கபில் தேவ் ஒரு பேட்டியில் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் முதல் முறை பார்க்கும்போது படம் அந்த அளவுக்கு பாதிக்க வில்லை என்று கூறினார். ஆனால் இரண்டாம் முறை பார்த்தபோது அவரால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறினார். மூன்றாம் முறை அவரால் படத்தை பார்க்க முடியவில்லை என்றும் அழுதுகொண்டு தியேட்டரை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து கபில் தேவ் பேசுகையில், "முதல் முறை பார்த்ததும் பரவாயில்லை, இது ஒரு படம் அவ்வளவுதான் என்று தோன்றியது. அது உண்மையில் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. இரண்டாவது முறை மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எங்கள் வாழ்க்கை திரையில் இவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் நான் கடைசியாக பார்த்த ஸ்போர்ட்ஸ் படம், பாக் மில்கா பாக்தான். ஆனாலும் 83 என்னை மிகவும் கவர்ந்தது. நான் மூன்றாவது முறையாக பார்க்கும்போது, தியேட்டரை விட்டு வெளியேறினேன், என்னால் அதை பார்க்க முடியவில்லை", என்று அவர் இந்தியில் பகிர்ந்து கொண்டார்.



ரன்வீர் சிங், கபீர் கான் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடித்திருந்ததாக தெரிவித்த அவர், தனது மகள் ஒரு சில சீன்களில் அது ரன்வீர் சிங் என்பதை மறந்து அப்பா என்றே எண்ணி உணர்ச்சிவசப்பட்டதாக குறிப்பிட்டார். "எனக்கும் பல காட்சிகள் நானே என்னை பார்ப்பது போல தோற்றுவித்தன. பல காட்சிகள் பழைய நினைவுகளை தூண்டியது. அதனால் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டேன். படத்தில் 98 சதவிகிதம் நடந்த உண்மையை காண்பித்திருக்கின்றனர். கொஞ்சம் சினிமாவுக்கேற்ற விஷயங்கள் சேர்த்துள்ளனரே தவிர கதையில் எந்தவித மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.