ஒழுங்கீனமாகச் செயல்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில்  இதற்கான கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கடந்த ஜனவரி மாதம் அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டுகளில் பயணித்ததும், பேருந்து ஓட்டுநரிடம் முறைகேடாகப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அண்மையில் தேனி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியர்களை மிரட்டும் வகையில் பேசி, காணொலியை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பொறுப்பு) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


''பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது குறித்து அண்மையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த விவகாரத்தில் மாவட்டந்தோறும் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.




பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்துப் பயணங்களில் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதை சிறப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி, ஆலோசனை அளிக்க வேண்டும். தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


இந்த விவகாரத்தை அனைத்து  முதன்மைக் கல்வி அதிகாரிகளும் முக்கியமான ஒன்றாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


கல்வி ரீதியில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''. 


இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண