‘காந்தாரா’ திரைப்படம், முதலில் புனித்ராஜ்குமாருக்கு சொல்லப்பட்ட கதை என்று அந்தப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி பேசி இருக்கிறார்.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடத்தில் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட ‘காந்தாரா’ அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அங்கு அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம், பிற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்றாற்போல் ‘காந்தாரா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ‘காந்தாரா’ திரைப்படம் அமோக வெற்றியை பெற்று, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
குறிப்பாக, ரிஷப் ஷெட்டியின் நடிப்பை அனைவரும் கொண்டாடினர். மேலும் பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே போல இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை ட்விட்டரில் பாராட்டியதோடு, நேரில் அழைத்தும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை ரிஷப் ஷெட்டி பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. நான் புனித்ராஜ்குமாரிடம் ‘காந்தாரா’ படத்தின் கதையை சொன்ன உடன், அவர் மிகவும் உற்சாகமாகிவிட்டார். அவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளை செய்ய வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், அவருக்கு இருந்த அடுத்தடுத்த திட்டங்களால் அவரால் காந்தாரா படத்தில் நடிக்க முடியாமல் சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் எனக்கு போன் செய்து, நான் நடிக்க வில்லை.. நீங்கள் படத்தை தொடங்குங்கள் என்று கூறினார். நான் அவருக்காக காத்திருந்தால், இந்த வருடத்திற்குள் இந்தப்படத்தை எடுக்க முடியாமல் போகலாம் என்று கூறினார்” என்று பேசினார்.
மேலும், புனித்ராஜ்குமார் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற பஜரங்கி 2 ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட போது, நான் அவரை சந்தித்தேன். அப்போது என்னிடம் பேசிய புனித் படத்தை உருவாக்குவதில் எந்த வித சமரசமும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அப்போது நான் படப்பிடிப்பு தொடர்பான சில படங்களை அவரிடம் காண்பித்தேன். அதை பார்த்த அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் ஊக்கமளித்தார்” என்று பேசி இருக்கிறார்.