தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என உருவாகியிருந்த இந்தப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும், அதிக திரையரங்களை சர்தாரே ஆக்கிரமித்து உள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார், டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கொரோனா காலங்களுக்கு முன்பே கார்த்தியின் ‘சர்தார்’ பணிகள் தொடங்கி விட்டன. நல்ல நடிப்புக்கு பெயர் போன நடிகர் கார்த்தி, இப்படத்தில் பல கெட்-அப்புகளில் நடித்திருந்ததாலும், பல்வேறு லொக்கேஷன்களில் படம் படம்பிடிக்க பட்டதாலும், மக்களின் மத்தியில் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ரசிகர்களின் பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு, இப்படம் தீபாவளி பரிசாக கடந்த 21 ஆம் தேதி வெளியானது.
சர்தார் படத்தின் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மக்கள் மீது படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட பிரின்ஸ் படமும் மக்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றதால், அடுத்தடுத்த காட்சிகளில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமானது.
2 ஆவது வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 40 கோடி வசூல் செய்த இந்தப்படம், உலக அளவில் 80 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம், விரைவில் 100 கோடியை வசூலித்து விடும் என்று திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னதாக கார்த்தி நடிப்பில், தீபாவளி பண்டிகையன்று ‘கைதி’ படம் வெளியானது. வெளியான அன்றைய தினம் கைதி 2.40 கோடி வசூல் செய்த அந்த திரைப்படம், தமிழகத்தில் 50 கோடி வரை வசூல் செய்திருந்தது. உலக அளவில் 100 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.