கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியானது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம். கன்னட திரையுலகத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்த இப்படத்தினை மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டது 'காந்தாரா' பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகெங்கிலும் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா :
அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் "தெய்வீகத்தால் மயங்கவும்" என வெளியிட்டுள்ளார் காந்தாரா திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி.
மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து காந்தாரா திரைப்படமும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சிகளை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இப்படத்தினை ஆங்கிலத்திலும் கண்டுகளிக்க முடியும்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட காந்தாரா :
காந்தாரா படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் தங்களின் காந்தார பயன் குறித்து பரிமாறிக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர், 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்கு காந்தாரா திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டதை குறித்து தெரிவித்து இருந்தார்.
காந்தாரா 2 அறிவிப்பு :
நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் ஷெட்டி "காந்தார திரைப்படத்துக்கு மக்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. கடவுளின் ஆசீர்வாதத்தால் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த வேலையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். உண்மையில் நீங்கள் கடந்த ஆண்டு பார்த்தது காந்தார பாகம் 2 . முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். இப்படத்தின் ஆழம் மிகவும் அதிகம் என்பதால் எனக்கு இந்த யோசனை படப்பிடிப்பு தளத்தில் தோன்றியது. அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் விரைவில் முழு விவரங்களையும் வெளியிடுவேன்" என கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
முதல் பாகம் 16 கோடி செலவில் உருவானது ஆனால் இரண்டாம் பாகம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மற்றொரு திரை விருந்தை காண இப்போதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.