சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்து, ரூ. 5 லட்சம் ரூபாயை அபராதம் விதித்தனர்.
அத்துடன், மீட்கப்பட்ட அந்த கிளிகளை கிண்டியில் உள்ள நேஷனல் சிறுவர் பூங்காவில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது சோசியல் மீடியாக்களில் கூண்டில் அடைக்கப்பட்ட இரு அலெக்ஸாண்ட்ரின் கிளிகளுக்கு தங்கள் வீட்டில் உணவு அளிப்பது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், வீட்டை ஆய்வு செய்து இரண்டு கிளிகளையும் கைப்பற்றி அபராதம் விதித்தனர்.
இதுதொடர்பாக நடிகர் ரோபோ சங்கரிடம் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோபோ சங்கர் தற்போது குடும்பத்துடன் ஸ்ரீலங்கா சென்றுள்ளதாகவும், சென்னை வந்தவுடன் முழு தகவலையும் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தான் வளர்த்த கிளிகள் ஆஸ்திரேலியாவை சார்ந்தவை அல்ல, நாட்டு கிளிகள் என்று விளக்கமும் அளித்துள்ளார்.