தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு ,  இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில் அனைத்து மொழிகளிலும் படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கேரளாவில் மால் திறப்பு விழா ஒன்றில் விக்ரம் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கன்னடட்த்தில் ப்ரோமோஷனுக்காக படக்குழு கர்நாடகா சென்றுள்ளது படக்குழு. 


ரிஷப் ஷெட்டியை சந்தித்த விக்ரம்






கர்நாடகா பயணம் செய்த நடிகர் விக்ரம் முன்னணி கன்னட நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியை இன்று சந்தித்தார். காந்தாரா படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பான் இந்தியளவில் அங்கீகாரம் பெற்றவர் ரிஷப் ஷெட்டி . நடிகர் விக்ரமை சந்தித்தது குறித்து ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ‘ ஒரு நடிகனாக என்னுடைய பயணத்தில் நடிகர் விக்ரம் எப்போதும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். 24 ஆண்டுகள் கழித்து என் ஆதர்ஸமான நடிகரை சந்தித்தது இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டசாலியான மனிதனாக என்னை உணரவைக்கிறது. என்னைப் போன்ற நடிகர்களுக்கு உந்துதலாக இருந்ததற்கு நன்றி விக்ரம். தங்கலான் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.


காந்தாரா 2


தற்போது ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியை தொடும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது