Demonte Colony 2: பாரு.. பாரு.. நல்லா பாரு! டிமான்டி காலனி 2ம் பாகத்திற்காக படக்குழு செய்யப்போற சம்பவம் - என்ன?
டிமான்டி காலனி 2ம் பாகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நாளை முதல் பேருந்து மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் வளர்ந்து வரும் நடிகர் அருள்நிதி. இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் டிமான்டி காலனி. இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.
டிமான்டி காலனி 2:
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் படத்தை போலவே முழுக்க முழுக்க பேய் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது.
Just In




இந்த நிலையில், டிமான்டி காலனி 2ம் பாகம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக டிமான்டி காலனி 2 படக்குழு பேருந்து மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை விளம்பரப்படுத்த உள்ளனர். இதற்கான பேருந்து சுற்றுப்பயணம் நாளை தொடங்குகிறது.
பேருந்து சுற்றுப்பயணம்:
கோவையில் நாளை தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 9ம் தேதி) திருச்சியிலும், நாளை மறுநாள் மதுரையிலும் நடைபெறுகிறது. பின்னர், ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளது.
கோயம்புத்தூரில் நாளை ஹிந்துஸ்தான் கல்லூரியில் காலை 11 மணியளவிலும், ப்ரோஜோன் மாலில் மாலை 5 மணிக்கும் இந்த பேருந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளது. திருச்சியில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஹோலி கிராஸ் கல்லூரியிலும், மதுரையில் அதே நாளில் மாலை 5 மணிக்கு அமெரிக்கன் கல்லூரியிலும் இந்த பேருந்து உலா வர உள்ளது. இறுதியாக, சென்னையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வி.ஆர். மாலில் மாலை 5 மணிக்கு உலா வருகிறது.
கடும் போட்டி:
சுதந்திர தின கொண்டாட்டமாக வெளிவரும் இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகத்துடன் தொடர்பு உள்ள வகையில் டிமான்டி காலனி 2ம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் டிமான்டி காலனி 2ம் பாகம் படத்திற்கு போட்டியாக தங்கலான், ரகுதாத்தா படங்கள் வெளியாகிறது. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியாகும் டிமான்டி காலனி 2 படம் மூலம் அருள்நிதியும், அஜய் ஞானமுத்துவும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.