நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா படமாக காந்தாரா பாகம் 1 வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க நேற்று வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு திரையரங்குகளில் கிடைத்துள்ளது.
காந்தாரா வசூல் வேட்டை:
கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளான நேற்றே இ்ந்த படம் இந்திய அளவில் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை பெற்றுள்ளது.
மாபெரும் வெற்றி:
தசரா பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவில் தொடர் விடுமுறை என்பதால் படத்தின் காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகவே இருந்தது. பெங்களூரில் 1021 காட்சிகள் நேற்று திரையிடப்பட்டது. அதில் 90 சதவீதம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருந்தது. ஹுப்ளி, மங்களூரு, பெலகாவி, மைசூர், ஹைதரபாத் என வெளியிடப்பட்ட இடங்களில் எல்லாம் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பான் இந்தியா வெற்றி:
கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் படத்திற்கு நேற்று நல்ல ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. தமிழ்நாட்டில் நேற்று காலை காட்சியில் 44.63 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் வந்த நிலையில், மதிய காட்சிக்கு 79.10 சதவீதம் ரசிகர்கள் கூட்டம் வந்தனர். பின்னர், மாலை காட்சியில் 75.55 சதவீதம் ரசிகர்கள் கூட்டம் வந்தனர். இரவுக்காட்சிக்கு 86.38 சதவீதம் ரசிகர்கள் வருகை பதிவானது. பெங்களூரில் 3 காட்சிகள் தமிழில் ரிலீசானது. 3 காட்சிகளும் 100 சதவீதம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.
தமிழ்நாட்டிலும் வசூல் வேட்டை:
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 396 காட்சிகள் திரையிடப்பட்டது. 79 சதவீதம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடியது. இதுதவிர மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, திண்டுக்கல் போன்ற நகரங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம், கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் தமிழில் வெளியான காந்தாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வட இந்திய நகரங்களில் இந்தியில் குறைவான அளவு காட்சிகள் திரையிடப்பட்டாலும் திரையிட்ட இடங்களில் எல்லாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியில் 41 சதவீதம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படம் மேலும் அதிகளவு வசூலை குவிக்கும் என்று கருதப்படுகிறது.
பன்மடங்கு லாபம்:
2022ம் ஆண்டு வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் முந்தைய பாகமாக இந்த காந்தாரா லெஜண்ட் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார். ரூபாய் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளே 65 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், வரும் ஞாயிறு இரவுக்குள் படம் இரண்டு மடங்கு லாபத்தை ஈட்டிவிடும் என்று கருதப்படுகிறது.
ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ப்ரகாஷ் துமினாட், ஹரிபிரசாந்த், நவீன் டீ பாடீல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரிஷப் ஷெட்டியின் நடிப்பிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஹோம்பளே ப்லிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜனீஷ் லோகேஷ் இசையமைத்துள்ளார். சமீபகாலமாக கன்னட படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், தாக்கத்தையும் உண்டாக்கி வருகிறது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகு கன்னட திரையுலகத்தை இந்திய திரையுலகினர் அதிகளவில் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.