IIFA விருதுகள்
இந்திய திரைப்பட நடிகர்களை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி IIFA. அந்த வகையில் 2023 ஆண்டுக்கான IIFA விருதுகள் நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் கடந்த ஆண்டு சப்த சாகரதாச்சே எல்லோ என்கிற படத்தின் மூலம் பரவலான கவனமீர்த்தவர் ஹேமந்த் ராவ். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்ததுன் படத்தின் திரைக்கதைக்காக இவர் தேசிய விருதையும் வென்றுள்ளார்
இது எனக்கு அவமானம்
" IIFA விருது நிகழ்வு எனக்கு ஒரு மிகப்பெரிய அசெளகரியம் மற்றும் அவமானகரமான ஒரு அனுபவமாக இருந்தது. சினிமாவில் நான் கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறேன். இந்த அவமானம் எனக்கு ஒன்றும் அவ்வளவு புதிய அனுபவம் கிடையாது. விருது நிகழ்வுகளுக்கு கலைஞர்கள் நாடு கடந்து வரவழைக்கப்பட்டு இப்படி தான் நடத்தப்படுகிறார்கள். எனக்கு எந்த வித விருதும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள அதிகாலை மூன்று மணி வரை நான் உட்காரவைக்கப் பட்டிருந்தேன். இதே நிலைமைதான் என்னுடைய இசையமைப்பாளர் சரண் ராஜூக்கும் ஏற்பட்டுள்ளது.
இது உங்களுடைய விருது. இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நான் நிறைய விருதுகளை வென்றதில்லை அதனால் நான் தூக்கமிழக்கவில்லை. விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் யார் என்பதை தெரிவிக்காமல் நேரடியாக விருது மட்டும் அறிவிக்கப்பட்டது. உங்கள் விருது வழங்கு நிகழ்ச்சி நீங்கள் மேடையில் நிறுத்தும் கலைஞர்களை வைத்து தான் ஓடுகிறது. இதற்கு நேர்மாறாக இல்லை என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அடுத்தமுறை நீங்கள் விருது கொடுக்க நான் தேவைப்படுவேன். அப்போது அந்த விருதை சூரியன் வெளிச்சம் படாத ஒரு இருளில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் சிறந்த தொழிலை செய்வதற்கு எனக்கு விருது தேவையில்லை. என்னுடைய படக்குழுவினர் ஒருசிலர் விருது வாங்குவதை பார்த்தது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது முழுவதுமாக டைம் வேஸ்ட் என்று சொல்லிவிட முடியாது " என அவர் தெரிவித்துள்ளார்.