திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ ஸ்ரீனிவாஸ் அவர்களது மகனான நடிகர் சூரஜ் கடந்த ஜூன் 24 ஆம் தேதி பைக்கில் சென்றுகொண்டிருந்த போது விபத்திற்குள்ளானார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் அவரது வலது கால் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் கன்னடத் திரையுலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.


சூரஜ்


ஐராவதா தாரக் ஆகிய கன்னடத் திரைப்படங்களில் உதவு இயக்குநராக பணியாற்றியவர் நடிகர் சூரஜ் குமார். அனுப் ஆண்டனி இயக்க இருந்த திரைப்படத்தின் மூலமாக நடிகராக அரிமுகமாக இருந்தார் சூரஜ். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் முடிவடையாமல் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரதம் என்கிறத் திரைப்படத்தில் நடித்து வந்தார் சூரஜ். சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப்  படத்தின் போஸ்டரை பகிர்ந்த சூரஜ் “உங்கள் அனைவரின் அன்புடன்” என்று பதிவிட்டிருந்தார் .


ஊட்டியில் இருந்து திரும்பும்போது விபத்து


கடந்த 20 ஆம் தேதி அன்று தனது பைக்கில்  ஊட்டியில்  இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ் எதிரில் வந்த டிப்பர் லாரியில் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்திற்குள்ளானார். மைசூரில் இருக்கும் மனிபால் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப் பட்டார் சூரஜ்.


சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி முழுவதுமாக சிதைந்துவிட்டதாகவும் அவர் மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் காவல் அதிகாரி ஒருவர்.


பலத்த அடி ஏற்பட்டதால சூரஜின் வலது காலை முழங்காலுக்கு கீழ் நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவர்கள். அவருக்கு நேர்ந்த இழப்பிற்காக கன்னடத் திரையுலகப் பிரபலங்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள். கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவா ராஜ்குமார் சூரஜை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.


பைக் விரும்பி


 சினிமாவிற்காக த்ருவன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட சூரஜ் அடிப்படையில் ஒரு பைக் பிரியர். அவரது சமூக வலைதளங்களில் தனது ஹார்லீ டேவிட்சன் பைக்குடன் தனது புகைப்படங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். ஊட்டிக்கு பைக்கில் பயணம் செய்து திரும்பும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.